மாநில செய்திகள்

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் + "||" + soorasamharam in Thiruchendur Subramanya Swamy Temple today

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபங்கள், விடுதிகள், தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலையில் ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.  அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் சென்று, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

7-ம் திருநாளான நாளை  (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

8-ம் நாளான 4-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறும். 9-ம் நாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ம் நாளான 7-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 12-ம் நாளான 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

விழாவை முன்னிட்டு, கோவில் கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. இன்பத்தை வழங்கும் கந்தசஷ்டியின் மகிமை
2-11-2019 கந்தசஷ்டி - முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் முக்கியமானது ‘கந்தசஷ்டி’ பெருவிழாவாகும்.