மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் கண்காட்சி: கீழடி அகழாய்வில் கிடைத்த 7 ஆயிரம் பொருட்கள் காட்சிக்கு வைப்பு


மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் கண்காட்சி: கீழடி அகழாய்வில் கிடைத்த 7 ஆயிரம் பொருட்கள் காட்சிக்கு வைப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 10:00 PM GMT (Updated: 2 Nov 2019 9:09 PM GMT)

மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் நடந்து வரும் கண்காட்சியில் கீழடி அகழாய்வில் கிடைத்த 7 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள்.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையினர் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடத்தி பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்களை எடுத்துள்ளனர். இதில், முதல் 3 கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மத்திய தொல்லியல் துறையினர் பெங்களூருவில் பாதுகாத்து வருகின்றனர்.

தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்ததில் கிடைத்த பொருட்களை கீழடியிலேயே கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கீழடியில் கிடைத்த அகழாய்வு பொருட்கள், மதுரை தல்லாகுளத்தில் உள்ள உலகத்தமிழ் சங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

‘3 டி’ தொழில்நுட்பம்

2-ம் நாளான நேற்று இந்த கண்காட்சியை காண ஏராளமான மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். பழங்கால பொருட்களின் பெயர், பயன்பாடு குறித்து எளிதாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அந்த பொருள் குறித்த தகவலும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருட்களின் பயன்பாட்டையும் மக்கள் ஆர்வத்துடன் படித்து அறிந்தனர்.

உலகத்தமிழ் சங்க கட்டிடத்தில் 3 அரங்குகளில் இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 3-வது அரங்கில் ‘3டி’ தொழில்நுட்பத்தில் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த முறையில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையாளர்கள் கையில் எடுத்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ‘3டி’ தொழில்நுட்ப அரங்கத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

7 ஆயிரத்துக்கும் அதிகமாக...

கண்காட்சி குறித்து தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில் ‘கண்காட்சியில் அகழாய்வில் எடுக்கப்பட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து நாட்களிலும் பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். தொல்லியல் துறையினர் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்’ என்றார்.

கண்காட்சியை பார்வையிட்டவர்கள் கூறும்போது, “கீழடிக்கு நேரில் சென்று பார்த்ததை போல் உணர்வுப்பூர்வமாக கண்காட்சி நடந்து வருவது பாராட்டுக்குரியது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு உன்னத நாகரிகத்தோடு தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது’ என்றனர்.

Next Story