ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பை தடுக்க நவீன ரோபோக்களை கண்டுபிடிக்க ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆர்வம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டம்


ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பை தடுக்க நவீன ரோபோக்களை கண்டுபிடிக்க ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆர்வம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:40 PM GMT (Updated: 2 Nov 2019 11:40 PM GMT)

ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பை தடுக்க நவீன ரோபோக்களை கண்டுபிடிக்க ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த ஆண்டு அவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. புதுமை கண்டுபிடிப்பு மையம் (சி.எப்.ஐ.) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஐ.ஐ.டி. மாணவர்களின் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் புதுமை கண்டுபிடிப்பு மையத்தில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

மாணவர்கள் தனித்திறமைகள் குறித்தும், அவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளால் சமுதாயத்துக்கு என்ன பலன்? என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக பொதுமக்கள் அவற்றை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அதன் செயல்பாடுகள் பற்றி உருவாக்கிய மாணவர்கள் விளக்கினார்கள்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

இதில் குறிப்பாக ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பார்சல் கொண்டுசெல்லுதல், பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது, விவசாய நிலங்களில் மருந்து தெளித்தல், ஆளில்லா மின்சார வாகனம், ‘ஹைபர் லூப்’ என்ற அதிவிரைவு போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல் உள்பட பல கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் ஒரு தீர்வை மேற்கொள்ளும்போது அது துல்லியமாகவும், விரைவாகவும் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமையும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

செயற்கை கை

அதேபோல், கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு கண்டுபிடிப்புகள் இதில் இடம்பெற்று இருந்தன. கை இழந்தவர்களுக்கு எந்த வேலைகளையும் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை பிளாஸ்டிக் கைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் பரவும் தவறுகளை கண்டறிந்து தீர்வுகாண்பது எப்படி? என்பது குறித்தும் மாணவர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

நவீன ரோபோக்கள்

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. டீன் பேராசிரியர் சிவகுமார் கூறியதாவது:-

அன்றாடம் வெளிவரும் நாளிதழ்களின் செய்திகளில் இடம்பெற்று இருக்கும் சம்பவங்கள், விபத்துகள், குற்றங்கள் போன்றவைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மூலம் எப்படி தீர்வுகாண்பது என்ற வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அமைகின்றன.

சமீபத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற முடியாமல்போன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்களை கண்டுபிடிக்க மாணவர்கள் பலர் ஆர்வம் காட்டி இருக்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த கண்டுபிடிப்பு மையத்தில் அந்த ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story