தமிழகத்தின் 5 வேளாண் திட்டங்களுக்கு நற்சான்றிதழ் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் வாழ்த்து


தமிழகத்தின் 5 வேளாண் திட்டங்களுக்கு நற்சான்றிதழ் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Nov 2019 11:44 PM GMT (Updated: 2 Nov 2019 11:44 PM GMT)

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு கிடைத்த நற்சான்றிதழை எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வேளாண்மைத்துறை அமைச்சர் வாழ்த்து பெற்றார்.

சென்னை,

தமிழக அரசு, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு சீரிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேளாண்மை துறையில் நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் மூலம் 25 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள், 2,500 ஏக்கர் அளவிலான 1,000 தொகுப்புகளாக்கப்பட்டன. அவற்றில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை பல்வேறு உத்திகளின் வாயிலாக மேம்படுத்தி சுமார் 10 லட்சம் மானாவாரி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு வகைகளில் செயலாற்றி வருகிறது.

சிறு-குறு விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒன்றிணைக்கும் கூட்டுப்பண்ணைய முறையினை ஊக்கப்படுத்தி, கூட்டாக சாகுபடி செய்தல், இடுபொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்தல், விளைபொருட்களை ஒருங்கிணைத்து, லாபகரமான விலையில் விற்பனை செய்தல் மூலம் 4 லட்சம் சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நுண்ணீர் பாசன திட்டம்

தமிழ்நாடு அரசு, நுண்ணீர் பாசன திட்டத்தினை சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடனும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடனும் செயல்படுத்தி வருகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தினை, வெளிப்படைத்தன்மையுடன் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, 2017-18-ம் ஆண்டு முதல் ( Micro Irrigation Management Information System MIMIS) என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நுண்ணீர் பாசனத்திட்ட மானியமாக 2018-19-ம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு சாதனை அளவாக ரூ.735 கோடி வழங்கியுள்ளது. இது நாட்டிலேயே நுண்ணீர் பாசனத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட மிக அதிகபட்ச மானியத் தொகையாகும். நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு மூலம், விவசாயிகள் பதிவு செய்வதிலிருந்து, மானியம் விடுவிக்கும் வரை உள்ள பல்வேறு பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

‘இ-தோட்டம்’

தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்கா சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காக்களை அழகுபடுத்தும் திட்டத்தில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்ணாடி இல்லமும் ஒன்றாகும்.

விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் விளையும் தோட்டக்கலை விளைபொருட்கள் மற்றும் தோட்டக்கலை நடவு பொருட்களை நுகர்வோர், வணிகர்கள் மற்றும் இதர விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ-தோட்டம்’ என்ற இணைய தளத்தின் மூலம் விவசாயிகள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதற்கான இணைய சந்தை தொடங்கியுள்ளது.

வாழ்த்து

இந்த 5 திட்டங்களை சிறப்பான முறையில் தமிழகத்தில் செயல்படுத்தியதற்காக டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் 5 ‘ஸ்காச்’ நற்சான்றிதழ்கள் ஸ்காட்ச் நிறுவனத்தால் தமிழக வேளாண்மை துறைக்கு வழங்கப்பட்டது.

பாராட்டி வழங்கப்பட்ட இந்த நற்சான்றிதழ்களை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது தலைமைச்செயலாளர் க.சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச்செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மைத்துறை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story