உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு?
உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி
உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப் போது கோர்ட்டில் தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தாலும் 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 9 தொகுதி களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தாலும் அதில் அடங்கிய 6 சட்டசபை தொகுதிகளில் 3-ல் கூடுதல் ஓட்டுகளை பெற்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது
ஆளும் கட்சிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தலையும் நடத்த அ.தி.மு.க. அரசு தயாராகி வருகிறது.
மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக டிசம்பர் 3-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் கட்டமாக 6-ந்தேதியும், 3-ம் கட்டமாக 9-ந்தேதியும் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story