‘குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும்’ - வெங்கையா நாயுடு வேண்டுகோள்


‘குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும்’ - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Nov 2019 5:00 AM IST (Updated: 4 Nov 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீருக்காக போர் உருவாகும் அபாயம் இருப்பதால் குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

பருவநிலை சார்ந்த ஆராய்ச்சி, ஆழிப்பேரலை தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக மிதவைகள் மூலம் கடற்செயற்பாடுகளை கண்காணித்தல், கடல்நீரை குடிநீராக மாற்றுதல், புதுப்பிக்கத்தக்க வளங்களை கடலில் இருந்து பெறுதல், ஆழ்கடலில் கனிமவளங்களை கண்டறிந்து வெளிக்கொணரும் தொழில்நுட்பங்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகம் மேற்கொண்டு வருகிறது.

தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் வெள்ளிவிழா கொண்டாட்டம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வள தொழில்நுட்ப வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் சென்னைக்கான கடலோர வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு அமைப்பு தொடர்பான புத்தகத்தை வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதேபோல தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகத்தின் வெள்ளி விழாவினையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி, வெள்ளி விழா கொண்டாட்டத்தை நினைவு கூரும் வகையிலான சிறப்பு தபால் உறையையும் அவர் வெளியிட்டார். விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

இந்தியாவுக்கும் கடலுக்கும் உள்ள உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சோழர்களின் பூம்புகார் துறைமுகம் இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நமது நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 20 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். 18 முதல் 20 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நிலம், நீர் உள்ளிட்ட வளங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலம், நீர் உள்ளிட்ட வளங்களை எவ்வாறு கையாள்வது? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நமது நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சினை எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும். தண்ணீருக்காக போர் கூட உருவாகும் அபாயம் இருக்கிறது. எனவே நாம் கடல்நீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான செலவு அதிகமாக உள்ளது. எனவே குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவதற்கான தொடர் ஆய்வுகளில் தேசிய கடல்வள தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும்.

அனல் மின்நிலையத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 6 ரூபாய் 60 காசுகள் ஆகிறது. சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.2 தான் செலவாகிறது. சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை அமைப்பதற்கு அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. எனவே குறைந்த செலவில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவேண்டும்.

அதேநேரத்தில் பருவநிலை மாற்றம், காற்று மாசு, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. விண்வெளி துறையில் நாம் ‘சந்திரயான்’ திட்டங்கள் மூலம் சாதனை படைத்திருக்கிறோம். இதேபோல கடல்சார் துறையில் ‘சமுத்ரயான்’ ஆய்வு திட்டங்கள் மூலமாக உலக அரங்கில் நாம் வருங்காலத்தில் சாதனைகள் படைக்கவேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்காக துறைமுகங்களை மென்மேலும் மேம்படுத்தவேண்டும். அதுபோல சுற்றுலாவையும் மேம்படுத்தவேண்டும். குறைந்த செலவில் நிறைந்த பயன்பாட்டை பெறுவது பற்றி நாம் சிந்திக்கவேண்டும். பள்ளி குழந்தைகளிடம் அறிவியல் உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். கடல் பொருளாதார மேம்பாட்டுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளவும், நிலைத்த நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் புதிய ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை, மந்திரி ஹர்ஷ்வர்தன் பேசுகையில், “உலகிலேயே சுனாமி உள்ளிட்ட பேரிடர் எச்சரிக்கை அளிக்கும் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. வானிலை முன்னெச்சரிக்கை, கடல்சார்ந்த முன்னெச்சரிக்கைகளை அளிப்பதில் அமெரிக்காவை விடவும் இந்தியா தான் முதல் இடத்தில் இருக்கின்றது.” என்றார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பேசினார்கள்.

முன்னதாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ராஜீவன் வரவேற்புரையாற்றினார். தேசிய கடல்வள தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் எம்.ஏ.ஆத்மானந்த் நன்றியுரை நிகழத்தினார்.

விழாவில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசின் வருவாய் நிர்வாக கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய வானிலை துறையின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story