கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : கொருக்குபேட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது


கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : கொருக்குபேட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2019 5:11 AM GMT (Updated: 4 Nov 2019 5:11 AM GMT)

சென்னையில் பட்டம்விட்ட நூல் கழுத்தை அறுத்து, 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபால் தனது 3 வயது மகன் அபினேஷ்வருடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.

அப்போது காற்றாடி விட பயன்படுத்தும் மாஞ்சா நூல் குழந்தை  அபினேஷ்வரின் கழுத்தை அறுத்துள்ளது. இரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த விசாரணையின் பேரில் மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். 

தந்தையின் கண் எதிரே சிறுவன் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆர்.கே.நகர் போலீசார், பட்டம் பறக்க விட்டதாக காமராஜ் நகரைச் சேர்ந்த 3 பேரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களில் நாகராஜ் என்ற இளைஞரையும், ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மாஞ்சா நூலையும் போலீசார் கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு இதே பகுதியில் பள்ளி சென்ற சிறுமி, மாஞ்சா நூலால் கழுத்தறுபட்டு இறந்ததை அடுத்து மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டது.

அப்படி இருந்தும் இப்பகுதியில் மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விடுவது அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மாஞ்சா நூல் விற்பவர்கள் மற்றும் அதனை கொண்டு பட்டம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story