வள்ளுவரை வைத்து அரசியல் நடத்தும் குழப்பவாதிகளை கண்டுபிடித்து நடவடிக்கை; பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்


வள்ளுவரை வைத்து அரசியல் நடத்தும் குழப்பவாதிகளை கண்டுபிடித்து நடவடிக்கை; பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:48 AM IST (Updated: 5 Nov 2019 4:48 AM IST)
t-max-icont-min-icon

வள்ளுவரை வைத்து அரசியல் நடத்த துடிக்கும் அரசியல்வாதிகளை, குழப்பவாதிகளை உடனடியாக அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. திருவள்ளுவரை விவாத பொருளாக மாற்றுவதும், கேலிக்குறியதாகவும், அவமானப்படுத்தக்கூடிய வகையிலும் நடத்துவதும், தமிழ் உணர்வுள்ள ஒரு தமிழன் கூட, தமிழன் மட்டுமல்ல தமிழ் மீது பற்று கொண்ட யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழனாக பிறக்காதவன் கூட ஏற்றுக்கொள்ள மாட்டான். தற்போது நடந்திருக்கக்கூடிய செயல் திட்டமிட்ட சதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே அரசும், துரித நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். வள்ளுவப்பெருந்தகைக்கு ஒரு அவமானம் ஏற்படுகிறது என்றால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நான் கருதுகிறேன்.

ஆகவே வள்ளுவரை வைத்து அரசியல் நடத்த துடிக்கும் அரசியல்வாதிகளை அல்லது குழப்பவாதிகளை உடனடியாக அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வள்ளுவப்பெருந்தகை மீது பற்று கொண்டவர்கள், தமிழின் மீது பற்று கொண்டவர்கள், தமிழ் அன்னைக்கு பிறந்தவர்கள் என்கின்ற மனநிலையோடு வள்ளுவப்பெருந்தகையை நடத்த வேண்டும். விவாதங்கள் மற்றவற்றிக்காக நடத்த வேண்டும்.

ஆனால் வள்ளுவருக்கும் இன்றைக்கு விவாதங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அதை மனதில் வைத்துக் கொண்டு, இதுபோல் அவமானகரமான செயலை செய்வது, தமிழர்களை உலக அரங்கில் தலைகுனிய வைக்கும் என்று நான் நம்புகின்றேன்.

இந்த செயலை செய்தவன் தமிழ் இன துரோகியாக தான் இருக்க முடியும் என்பதில் தமிழ்நாடு அரசும், தமிழக மக்களும் உணர்ந்து உடனடி நடவடிக்கைக்கு முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story