கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று அவசியம்; உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை


கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று அவசியம்; உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2019 5:09 AM IST (Updated: 5 Nov 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

பக்தர்களுக்கு கூடுதல் தரத்துடன் வழங்கும் வகையில் கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று அளிக்கும் பணியில் உணவு பாதுகாப்புத்துறை தீவிரமாக இறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 36 ஆயிரத்து 606 கோவில்கள் உள்ளன. மேலும் 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த 58 கோவில்களும் உள்ளன. இதில் 754 கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான கோவில்களில் ‘ஸ்டால்கள்’ அமைக்கப்பட்டு லட்டு, அப்பம், முறுக்கு, அதிரசம், புளியோதரை, வடை, தட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை பிரசாதங்களாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்துக்கு சுகாதார சான்று பெற வேண்டும் என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை கடந்த 2017-ம் ஆண்டு அறிவுறுத்தியது. ஆனால் கோவில்களில் அதற்குரிய தயாரிப்பு பயிற்சிகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சுகாதார சான்று பெறுவதில் சிக்கல் நீடித்தது.

இந்தநிலையில் பக்தர்களுக்கு கூடுதல் தரம் மற்றும் சுகாதாரத்துடனும் வழங்கும் வகையில், பிரசாதங்களுக்கு சுகாதார சான்று பெறுதல் அவசியம் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இதனை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று, பிரசாதங்களுக்கு சுகாதார சான்று பெறுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 46 கோவில்களில் இந்த நடைமுறையை சாத்தியப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை அறிவுரையை ஏற்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்பட தமிழகத்தில் உள்ள 46 பெரிய கோவில்களில் முதற்கட்டமாக இந்த நடைமுறையை அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

ஏற்கனவே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்துக்கான 2-வது இடத்தை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட 46 கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று விரைவில் பெறப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்து சமய அறநிலையத்துறையின் வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக 46 கோவில்களின் பிரசாதங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சில கோவில்களின் பிரசாதங்களும் பரிசோதனை செய்யப்பட்டு, சுகாதார சான்று வழங்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிவடையும்” என்றனர். 

Next Story