ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது; தாசில்தார்களுக்கு உத்தரவு


ஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது; தாசில்தார்களுக்கு உத்தரவு
x

ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றிய கணக்கெடுக்கும் பணியை தொடங்க அனைத்து தாசில்தார்களுக்கும், அந்தந்த கலெக்டர்கள் அலுவலகம் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை, 

சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை வசூலிக்கும் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டதின் பேரில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த விடுதலை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சமயத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், அவர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மறுசீராய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை யாரிடம் வசூலிப்பது?’, என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சொத்துகள் என்ன ஆகும்? என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில் ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்பும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் கலெக்டர் கள் அலுவலகத்தில் இருந்து அனைத்து தாசில்தார்களுக்கும் இதுதொடர்பாக ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த கடிதத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் ஏதும் இருந்தால் அதன் விவரத்தையும், இல்லை என்றால் ‘இனம் இல்லை’ என்று குறிப்பிட்டு பதில் அனுப்பிட வேண்டும்’, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்கவே, அவருக்கு சொந்தமான சொத்துகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story