கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு; சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் பற்றி விளக்கியதாக தகவல்


கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு; சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் பற்றி விளக்கியதாக தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2019 5:24 AM IST (Updated: 5 Nov 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார்.

சென்னை, 

தமிழகத்தில் சமீபத்தில் அரசு மருத்துவர்களின் போராட்டம், பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியது. போராடினால் நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரிக்கப்பட்ட பிறகு, போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமரியாதை செய்தனர். இது அரசியல் கட்சியினரிடையேயும், மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், நேற்று மாலை 4.50 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு திடீரென்று சென்றார். அதைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றங்கள் வருவதாகவும், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

மாலை 5 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது கவர்னருக்கு முதல்-அமைச்சர் பூங்கொத்து கொடுத்தார்.

இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. மருத்துவர்களின் போராட்டம் மற்றும் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக அரசு கையாண்ட விதம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து கவர்னரிடம், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கியதாக அரசு வட்டாரத்தில் கூறப்பட்டது.

முதல்-அமைச்சருடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோர் சென்றனர்.

Next Story