ரூ.800 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர்
ரூ.800 கோடி வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் நேற்று ஆஜரானார். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
சென்னை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதப்பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இதை தலைமை இடமாக கொண்டு பல்வேறு இடங்களில் அதற்கு கிளைகளும் இயங்கி வருகின்றன. இந்த ஆசிரமத்தை கல்கி பகவான் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
அவரை தேடி ஏராளமானோர் வந்தனர். அவர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இதில் அவருக்கு பணம் அதிகளவில் கிடைத்ததாகவும், அதை வைத்து சித்தூரில் பிரமாண்டமாக கல்கி ஆசிரமத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்கி ஆசிரமம் பெயரில் பல்வேறு இடங்கள் வாங்கப்பட்டு இருப்பதாகவும், கட்டுமான துறை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்ததன. அதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் கடந்த 16-ந் தேதி கல்கி ஆசிரமத்தின் தலைமை இடத்திலும், பல இடங்களில் உள்ள ஆசிரமத்தின் கிளைகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
மொத்தம் 40 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த மாதம் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த சோதனை நடந்தது.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனை முடிவில் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் ரூ.800 கோடி வருவாய் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்திய பணம் ரூ.44 கோடியும், வெளிநாட்டு பணம் ரூ.20 கோடியும் என மொத்தம் ரூ.64 கோடி கணக்கில் வராத பணமும், மேலும் 88 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான வைரங்களும், சில ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வருமான வரித்துறையில் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க கல்கி பகவானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று அவர் ஆஜரானார்.
அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிநாட்டு பணம் ஆசிரமத்துக்கு வந்தது எப்படி? கணக்கில் காட்டாத இவ்வளவு பணங்களை இருப்பாக வைத்திருப்பதற்கான காரணம் என்ன? தங்கம் மற்றும் வைரங்கள் சேர்த்தது எப்படி? என்பது போன்ற பல்வேறு வினாக்கள் அவரிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story