புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்


புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 7 Nov 2019 8:21 AM GMT (Updated: 7 Nov 2019 8:21 AM GMT)

புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ‘புல்புல்’ புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. 

இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.  நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும்.  தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  இந்த புயல் காற்று மணிக்கு 155 கி.மீ. வரைக்கும் வேகமுடன் வீச கூடும்.

இதனால் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும்.  இதனை முன்னிட்டு வருகிற 11ந்தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதனிடையே, புல்புல் புயலால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை முதல் 10ந்தேதி வரை 3 நாட்களுக்கு, வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.  இதனால் தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Next Story