வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, தற்போது ‘புல் புல்’ புயலாக மாறி, வலுப்பெற்று வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காள கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் 12 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
‘புல் புல்’ புயல் தற்போது தீவிரமடைந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை தொடரும்.
சென்னையில் கடந்த 3 நாட்களாக காற்றின் வேகம் முற்றிலுமாக குறைந்து காணப்படுகிறது. மேலும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்துடன் வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகைகள் கலந்து விடுகின்றன. இதனால் காலை நேரங்களில் பனிமூட்டம் போல் காட்சி அளிக்கிறது. இந்த புகை காற்றின் வேகம் அதிகரிக்கும் போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story