தமிழ் அகராதியியல் நாள் விழா: 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்


தமிழ் அகராதியியல் நாள் விழா: 9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:31 PM GMT (Updated: 8 Nov 2019 11:31 PM GMT)

வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 8-ந்தேதி இந்த ஆண்டு முதல் தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை, 

அரசாணை பிறப்பிக்கப்பட்டு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி கலையரங்கில் தமிழ் அகராதியியல் நாள் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

9 ஆயிரம் புதிய தமிழ் சொற்கள் அடங்கிய குறுந்தகட்டை(சி.டி.) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டார். விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் ‘தமிழில் இருந்து மற்ற மொழிக்கும், மற்ற மொழியில் இருந்து தமிழுக்கும் மொழி மாற்றம் செய்யும் வகையில் 145 அகராதிகள் உள்ளன. இதில், 9 அகராதியில் மட்டும் 4 லட்சத்து 12 ஆயிரம் சொற்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 700 சொற்கள் தனித்துவம் வாய்ந்த சொற்கள் ஆகும். செந்தமிழ் சொற்பிறப்பியல் இணையதளம் மூலம் மாணவ-மாணவிகளும் புதிய தமிழ் சொற்களை பதிவு செய்யலாம்’ என்றார்.

இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Next Story