‘அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விட மாட்டார்’ கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு


‘அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விட மாட்டார்’ கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:46 PM GMT (Updated: 8 Nov 2019 11:46 PM GMT)

அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விடமாட்டார் என்று கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை, 

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை நிரூபியுள்ளார். இந்த சிலை திறப்பு விழா மற்றும் ராஜ்கமல் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு கமல்ஹாசனுடன் இணைந்து கே.பாலசந்தர் சிலையை திறந்துவைத்தார். பின்னர் இருவரும் ஒன்றாக இணைந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

என் கலையுக அண்ணன் கமல்ஹாசன். கமலுக்கு இது மறக்க முடியாத நாள். அவருடைய தந்தை சீனிவாசன் சிலையை திறந்துவைத்தார். இன்றைக்கு தன்னுடைய கலையுலக தந்தை கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்திருக்கிறார். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் கூட தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை என்றால் உயிர், அவர் எங்கு சென்றாலும் அதை மறக்கமாட்டார்.

ராஜ்கமல் தயாரிப்பில் முதல் படம் ராஜபார்வை. அதற்கு பிறகு நிறைய படங்கள் எடுத்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்தும், கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அந்த படத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டு இருப்பார். அவர் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார் என்பது அந்த படத்தை பார்க்கும்போது நமக்கே தெரியும்.

எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது அந்த படம் வித்தியாசமாக தெரியும். கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் என்னுடைய உணர்வுகளை, வார்த்தைகளாக சொல்ல முடியவில்லை. சந்தோஷப்படுவதா? சோகப்படுவதா? என்று தெரியவில்லை. பெரிய மகான் நம்முடன் இல்லை. சிலையை பார்க்கும் போது அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது.

அவர் என்னிடம் சொன்ன ஒரே வார்த்தை, ‘நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள், நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார்’ என்று கே.பாலசந்தர் சொன்னார், நான் என்று அவர் சொன்னது பாலசந்தர் அல்ல, தமிழக மக்களை. தமிழ் மக்களின் ரசனை, தமிழ் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டவர். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல்ஹாசன். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்து கமலை ரசித்துக் கொண்டே இருப்பார். 17-ந்தேதி மிகப்பெரிய விழா இருக்கிறது, அன்றைய தினம் கமல்ஹாசன் பற்றி இன்னும் நிறைய பேசுவேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஏற்புரை வழங்கி கமல்ஹாசன் பேசியதாவது:-

இந்திய சினிமாவில் ரஜினியை தாமதமாக கவுரவித்தாலும், தக்க மனிதரை தான் கவுரவித்து இருக்கிறார்கள். என் பாணியும், ரஜினி பாணியும் வேறு, வேறாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம். இரு பாதையை ‘அவர்கள்’ படம் முடிவு செய்தது. அந்த இளைஞர்களை பார்த்தபோது இப்போது வியப்பாக இருக்கிறது, தெளிவாக இருந்திருக்கிறார்களே? இப்போது உள்ளவர்களிடம் அந்த தெளிவு உள்ளதா? எனக்கு தெரியாது.

அன்றைக்கு அந்த 2 இளைஞர்களாகிய நாங்கள் என்ன பேசினோம் என்பதை யாருக்கும் தெரியாது. அதன்பிறகு நாம் ஒருவர்கொருவர் மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பேசினோம், காரணம் எதிர்காலம் நமக்கு மிக நல்ல வாழ்க்கை அளிக்க தயாராகி விட்டது என்பது தான். நாம் அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இருவரும் பேசிக்கொண்டோம். அந்த ரகசிய ஒப்பந்தம் இன்று வரை நீடிக்கிறது.

எங்கள் ரசிகர்களாக பலர் மாறுவதற்கு முன்பு எங்களின் முதல் ரசிகர்களும், விமர்சகர்களும் நாங்கள் இருவரும் தான். எங்களை நாங்கள் பாராட்டியும் கொள்வோம். மணிரத்னம் ரஜினிகாந்தை வைத்து ‘தளபதி’ படம் செய்ய போவதாக என்னிடம் சொன்னார். என் காதில் அது ‘கணபதி’ என்று விழுந்தது. டைட்டில் எப்படி என்று கேட்கிறார், நான் கையை அசைத்து நல்லாயில்லை என்று சொன்னேன். ஏன் என்று கேட்டார், இல்ல விநாயகர் சதுர்த்தி போல ஆகி விடும் என்றேன்.

அப்புறம் அவர் தளபதி என்ற பெயர் நல்லாதானே இருக்கிறது என்றார். அதற்கு பிறகு தான் எனக்கு கணபதி அல்ல, தளபதி என்று தெரியவந்தது. உடனே நான் மணியிடம், பிரம்மாதமான தலைப்பு என்றேன். உடனே நாங்கள் சிரித்து விட்டோம், அப்படி தான் நாங்கள் யதார்த்தமாக இருந்தோம். எல்லாவற்றையும் பேசுவோம். எங்க ரசிகர்கள் எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டைபோடுவார்கள். நாங்கள் தனியா என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்தால் வியந்து போய் விடுவார்கள். ஆனால் நாங்கள் அப்படி விட்டு வைத்து விட்டோம். ஏனென்றால் 2 கோல் போஸ்ட் இருந்தால் போட்டி இருக்கும்.

இடையில் ஒருநாள் ரஜினி என்கிட்ட வந்து நான் சினிமாவை விட்டு போக போகிறேன் என்றார். நான் அவரிடம் சொன்னேன், அதெல்லாம் செய்தீர்கள் என்றால் நடப்பதே வேற, என்னையும் போக சொல்லுவங்கய்யா என்றேன். நம்ம 2 பேரையும் வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள், அவர்கள் விளையாடட்டும் என்றேன். இதுவரை அவர் எத்தனை வெற்றி படங்கள் கொடுத்து இருக்கிறாரோ? அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது. நான் தான் அவரை சினிமாவில் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.

யார்? எதை சொன்னாலும் நானும் ரஜினியும் பேசிக்கொள்வோம். எனவே எங்களுக்குள் யாரும் வத்தி வைக்க முடியாது. ஐக்கான் விருது பெற்ற ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருந்தாலும், இங்கே அன்பு பரவி இருக்கிறது. கே.பாலசந்தர் இங்கே சிலையாக இருக்கிறார், உயிரோடு இருந்திருந்தால் இப்போது இங்கே இருந்திருப்பார். ராஜ்கமல் பயணம் தொடரும். ராஜ் கமல் நிறுவனத்தின் 50-வது படம் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.

Next Story