கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்


கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 9 Nov 2019 5:20 AM IST (Updated: 9 Nov 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள, தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருமணம் ஒன்றை நடத்தி வைத்தார். திருச்சியை சேர்ந்த கதிரவன் - ஷியாம்லி ஆகியோரின் இந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்றைக்கு (நேற்று) நடைபெற்ற அந்த எளிமையான, சுயமரியாதை திருமணமானது, மகிழ்ச்சி கூட்டிடும் ஒரு விழாவாக நடைபெற்றது. காரணம் அது நடைபெற்ற இடம், வீடோ, மண்டபமோ அல்ல. ஆலயம் என்று சொல்லலாம். ஏனென்றால் வங்கக்கடற்கரையில், தன்னுடைய தங்கத்தலைவர் அண்ணா உறங்குகின்ற இடத்திற்குப் பக்கத்திலே ஓய்வு கொள்ளா நம் தலைவர் (கருணாநிதி) ஓய்வு கொள்கிறாரே, அந்த இடத்திலேதான். இன்றைக்கு நம் கட்சி தொண்டரின் திருமணத்தை நடத்தி வைக்கின்ற ஒரு பெரும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

தலைவர் கருணாநிதி மீது அன்பும், பாசமும், மரியாதையும் கொண்ட இப்படிப்பட்ட ஒரு தொண்டரின் திருமணத்தை, தலைவர் கருணாநிதி ஓய்வெடுக்கிற அந்த இடத்தில், நடத்தி வைக்கிறபொழுது, என்றென்றும் நம் இதயத்தில் வாழ்கின்ற அந்தத் தலைவரின் வாழ்த்துரை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு, எதிரொலித்தது. அதே உணர்வுதான் அந்த மணவிழா இணையருக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அவர்களுடன் இணைந்து வந்திருந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

கருணாநிதி எத்தகைய திருமணத்தை விரும்புவாரோ, அத்தகைய திருமணத்தை அவருடைய நினைவிடத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற என் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என்ற, அந்த கழகக் குடும்பத்தினரின் விருப்பமும், திருமண முறையில் அவர்கள் காட்டிய எளிமையும், அதற்காக முன்கூட்டியே என்னிடம் அனுமதி பெற்று, தேதியும், நேரமும் வாங்கி இந்த மணவிழாவினை மிகச்சிறப்பான முறையில் நடத்தி இருப்பதும், மனதிற்கு மட்டிலா மகிழ்ச்சியை அளிக்கிறது.

தி.மு.க. வரலாற்றில் பல திருமணங்கள் இப்படி புரட்சிகரமாக, மனதை கவரக்கூடிய வகையிலே, மாற்றாருக்கும் வழிகாட்டக்கூடிய வகையிலே, புதிய முறையிலே, புதுமைச் சிந்தனையுடன் நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையிலே, இன்று நடைபெற்ற இந்த திருமணமும் மரபுகளைக் கடந்து, புதுமையை அணுகி நடைபெற்ற திருமணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story