அயோத்தி வழக்கு தீர்ப்பு: தமிழக தலைவர்கள் கருத்து
அயோத்தி வழக்கு தீர்ப்பு தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட 5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பினை அளித்தது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல என்று குறிப்பிட்டனர்.
இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தமிழக தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:-
* அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்வர் ராஜா கேட்டுக்கொண்டார்.
* அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும், சமமான சிந்தனையுடன், மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் என நம்புகிறேன் - திமுக தலைவர் ஸ்டாலின்
* உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்திய நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்காக, அனைத்து மதத்தினரும், மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த்
* அயோத்தி தீர்ப்பு தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, நூறு ஆண்டுகால பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி
* அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க வேண்டும். மதசார்பின்மை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு என நீதிபதிகள் கூறியுள்ளனர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்
* அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும், அனைவரும் மதிப்போம் - பாமக நிறுவனர் ராமதாஸ்
* மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
* பாபர் மசூதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் மற்றும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது - விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி.,
* உச்சநீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்; யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாத தீர்ப்பு - இல.கணேசன்
* அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
* மனக்கசப்புகள் முடிவடைந்து, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும் - ஜி.கே.வாசன்
* அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அனைவரும் பெருமைப்பட வேண்டும் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
* இந்துக்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ பெருமையோ, மகிழ்ச்சியோ கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன் - மதுரை ஆதினம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story