அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்போம்’ தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்


அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்போம்’ தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Nov 2019 11:42 PM GMT (Updated: 9 Nov 2019 11:42 PM GMT)

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்போம் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை, 

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியான நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-

நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு - வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மத நல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

இந்தத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல. யாருக்கும் தோல்வியும் அல்ல. ஒரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையிலான நில உரிமை குறித்த வழக்கில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அது அவர்களுக்கு இடையிலான உறவை எந்த வகையிலும் எப்படி பாதிக்காதோ, அதேபோல் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுகளை எந்த வகையிலும் பாதித்துவிடக் கூடாது. மாறாக, இரு மதங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான கருவியாகவே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

சுப்ரீம் கோர்ட்டு 100 ஆண்டு கால பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது. அந்த தீர்வை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது. தேசிய கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கும் மரியாதை செலுத்த வேண்டும்.

அவரவர்கள் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த்:-

பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் தீர்ப்பு அனைத்து மதத்தினரும், அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு தீர்ப்பாக இருக்கிறது. எனவே இந்த தீர்ப்பை நாம் அனைவரும் மத நல்லிணக்கத்தை மனதில் கொண்டு வரவேற்போம். பொதுமக்களுக்கும், பொது உடமைகளுக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வகையில் மத்திய-மாநில அரசுகள் கவனமாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த தீர்ப்பை நாம் மதிப்போம், வரவேற்போம்.

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன்:-

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கிறது. எவருக்கும் வெற்றியோ, தோல்வியோ இல்லாத தீர்ப்பு. ஆனால் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். தீர்ப்பை வரவேற்கின்றோம், மகிழ்ச்சி அடைகின்றோம் அது ராமஜென்ம பூமிதானா? என்பது மட்டும் தான் கேள்விக்குறியாக இருந்தது.

வரலாற்று ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஆய்வு செய்யாமல் சட்ட ரீதியாக மட்டுமே ஆய்வு செய்து தீர்ப்பை வழங்குகிறோம் எனக்கூறி நல்ல ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தினர் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக ஒரு நிலத்தை அயோத்தியில் ஒதுக்க வேண்டும் என்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். பா.ஜ.க. இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவை இந்த தீர்ப்பு நிறைவேற்றி உள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத்தான் இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்த கால வரலாறு காட்டுகிறது. மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருக்கிறது.

எனவே, மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

அயோத்தி பிரச்சினைக்கு சமரசப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வினை எட்ட முடியவில்லை என்றால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் தேவையை சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியிருக்கிறது. அந்த சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும் என இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம்.

எந்தவொரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையை கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது. மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அனைத்து பகுதி மக்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். எந்தவொரு தரப்பும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் நீதி பரிபாலன முறையின் உச்ச அமைப்பு வழங்கிய தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு என்று கூறியிருப்பதை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்க சூழலை பராமரித்து வருவது குடிமக்களின் கடமைப் பொறுப்பு என்பதை உணர்ந்து, அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

பாராளுமன்ற ஜனநாயகத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் சிறந்த வழி. அயோத்தியை மையமாக வைத்து இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் இன்றோடு முடியட்டும். இன்று முதல் புதிய தொடக்கமாக நல்லுறவு தொடங்கட்டும், மேம்படட்டும்.

எனவே, அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை த.மா.கா. சார்பில் வரவேற்று இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்து தரப்பினரும் அணுகிட வேண்டும். இந்த நேரத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். இந்த தீர்ப்பின் வாயிலாக வெற்றியோ, தோல்வியோ அடைந்ததாக எந்த தரப்பினரும் கருத வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பினை இறுதித் தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு அனைத்து இந்திய மக்களும் ஒற்றுமையுடன் மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் சவாலான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, அமைதியை பாதிக்கும் வகையிலான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்திடுங்கள். தீர்ப்பினை மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொண்டு தேச ஒற்றுமையை பாதுகாப்போம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

அனைத்து தரப்பு மக்களும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ வழிகாட்டுகிற தீர்ப்பாகவே அமைந்துள்ளது. இறைவனின் பெயரால் பொதுமக்கள் மோதிக்கொள்ளும் போக்கை கைவிட்டு அனைவரும் ஏற்றுக்கொள்கிற வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்காத வகையிலும் அப்பாவி மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையிலும், இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்கிற வகையிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டி வரவேற்கிறேன்.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்:-

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது. குறிப்பாக 5 நீதிபதிகளும் மக்கள் மனதையும், சட்ட வரம்புகளையும், மத நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளனர் என இந்து முன்னணி கருதுகிறது. இந்த தருணத்தில் இந்த ஒரு நல்ல தீர்ப்புக்காக பல ஆயிரம் பேர் தங்கள் உயிரை பலி தந்துள்ளனர். அவர்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுவது மிக அவசியம்.

இந்த பிரச்சினை இதோடு முடிவடைந்துவிடவில்லை. இன்னும் உத்தரகாசி பிரச்சினையும் உள்ளது. அயோத்தியில் கோவில் கட்டு பணிகளுக்கு தேவையான கல் மண்டபங்கள் போன்ற பல்வேறு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. அதே நேரத்தில் பொதுமக்களும், அனைத்து அரசியல்வாதிகளும், அமைப்புகளும் தேசிய ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகள் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு கூறி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை ஏற்கிறோம். இனி மதத்தின் பெயரால், தெய்வத்தின் பெயரால் இந்தியாவில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது. சகோதரர்களிடையே கலவரத்தை தூண்டக்கூடாது. அதற்கு முதல் படியாக இந்த தீர்ப்பை பயன்படுத்த வேண்டும்.

கலவரத்துக்கு யாரும் வித்திடக்கூடாது. அவர்களை மத்திய அரசும், மாநில அரசும் கவனிக்க வேண்டும். மீண்டும் கலவரத்துக்கு இதை ஒரு யுக்தியாக பயன்படுத்தக்கூடாது. இந்த தீர்ப்பை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வர வேண்டும். மக்களிடம் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். வெறுப்பை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இத்தீர்ப்பின் மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நீதி கிடைக்கும் வரை பொறுமை காப்பது அவசியமாகும். அரசாங்கத்தின் ஏனைய உறுப்புகள் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட நிலையில், இந்திய மக்கள் இப்போது தமது பாதுகாப்பு அரணாக சுப்ரீம் கோர்ட்டைத்தான் பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு தகர்த்து விட்டது. இந்த தீர்ப்பின் மீதான சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் நீதி கிடைக்கும் என நம்புவோம். அதுவரை அமைதியோடு யாருடைய ஆத்திரமூட்டலுக்கும் பலியாகாமல் மத நல்லிணக்கம் காப்போம்” என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் உள்ளிட்டோரும் தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா மொய்னுதீன் பாகவி, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் உள்ளிட்டோர் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story