மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை


மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 9 Nov 2019 11:46 PM GMT (Updated: 9 Nov 2019 11:46 PM GMT)

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சென்னை, 

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில், கடந்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், நவம்பர் மாதம் 10-ந்தேதி (இன்று) தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக்குழு அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

என்றாலும், தி.மு.க. பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தே அதிகம் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து பொறுப்புகளுக்கும் தி.மு.க. சார்பில் யாரை நிறுத்தலாம் என்ற பெயர் பட்டியலுடன் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 3,500 பேர் பங்கேற்க இருக்கிறார்கள்.

Next Story