இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க. மக்கள் இயக்கம் என நிரூபிக்கப்பட்டு உள்ளது முதல்-அமைச்சர் பேச்சு


இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க. மக்கள் இயக்கம் என நிரூபிக்கப்பட்டு உள்ளது முதல்-அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 10 Nov 2019 11:30 PM GMT (Updated: 10 Nov 2019 8:35 PM GMT)

இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றியின் மூலம் அ.தி.மு.க. மக்கள் இயக்கம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தர்மபுரி,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன்- மல்லிகா ஆகியோரின் மகன் என்ஜினீயர் ஏ.சசிமோகன், சென்னையை சேர்ந்த கே.மனோகரன்-குமுதம் ஆகியோரின் மகள் என்ஜினீயர் எம்.பூர்ணிமா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நேற்று நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஜெயலலிதாவின் அன்பை பெற்றவர். 2001-ம் ஆண்டு முதல் இதுவரை ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியவர். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அயராது உழைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்து இந்த மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபித்து உள்ளார்.

கே.பி.அன்பழகன் கடந்த 2016-ம் ஆண்டு முதல் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். உயர்கல்வித்துறையில் சிறந்த நிர்வாகம் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உருவாகி உயர்கல்விதுறையில் முதலிடம் பெற்று உள்ளது. உயர் கல்வியில் ஒரு சகாப்தம், வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் மூலம் அ.தி.மு.க. ஒரு மக்கள் இயக்கம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் வலிமையை மக்கள் மன்றத்தில் நிரூபித்துள்ளோம். அ.தி.மு.க.வின் வலிமையை மக்கள் வாக்குகள் மூலம் உணர்த்தி உள்ளனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story