அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன சொல்கின்றன?


அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன சொல்கின்றன?
x
தினத்தந்தி 10 Nov 2019 11:30 PM GMT (Updated: 10 Nov 2019 9:15 PM GMT)

அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

சென்னை,

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், சன்னி வக்பு வாரிய அமைப்பினர் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அரசு 5 ஏக்கர் நிலம் வழங்கி அதில் மசூதி கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு குறித்து தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சீனா டெய்லி உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் தங்கள் கருத்துகளை செய்தியாக வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

தி நியூயார்க் டைம்ஸ்

பிரபல அமெரிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ், “அயோத்தி தீர்ப்பு மோடிக்கு வழங்கப்பட்ட வெற்றி” என்று குறிப்பிட்டு உள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது, அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டுவதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக வெளியிட்டது. தீர்ப்பை இந்திய முஸ்லிம் மக்களும் பலர் ஏற்றுக் கொண்டு உள்ளனர். மோடியும், இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

தீர்ப்பில் முஸ்லிம் அமைப்புகளுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தீர்ப்பை மோடி அரசு வரவேற்றாலும், மக்களை கொண்டாட்டங்களில் ஈடுபடாமல், அனைவரும் அமைதியாக இருக்க வலியுறுத்தியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சீனா டெய்லி

இந்தியாவின் ‘சர்ச்சைக்குரிய அயோத்தி தளம்’ பற்றி புளூம்பெர்க் அறிவித்த செய்தியின் ஒரு பகுதியை ‘சீனா டெய்லி’ வெளியிட்டது.

அதில், “இந்த தீர்ப்பு மதச்சார்பற்ற இந்தியாவின் முக்கியமான வழக்கை சமாளிக்கும் திறனை சோதித்து உள்ளது. அயோத்தி தளத்தில் ஒரு பெரிய கோவில் கட்டுவதாக பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்ற பட உள்ளது” என்று கூறப்பட்டு உள்ளது.

தி வாஷிங்டன் போஸ்ட்

அமெரிக்காவின் மற்றொரு முன்னணி நாளிதழான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’, “இந்திய நாட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய மத தளத்தில் ஒரு இந்து கோவிலை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது” என்ற தலைப்பில் அயோத்தி பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் அதில், “இந்த தீர்ப்பு, இந்து தேசியவாதிகளின் நீண்டகால நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. ராமர் கோவிலை கட்டுவது இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று கூறியுள்ளது”.

“வழக்கின் வரலாற்று பின்புலத்தை வைத்து பார்த்தால், இந்த வழக்கின் முடிவு இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக தோற்றத்தை வடிவமைக்க உதவும்” என்று அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

‘கலீஜ் டைம்ஸ்’

துபாயை தலைமையிடமாக கொண்ட ‘கலீஜ் டைம்ஸ்’ நாளிதழ் தனது தலைப்பில், “அயோத்தி தீர்ப்பு சர்ச்சைக்குரிய நிலத்தில் கோவிலும், சன்னி வக்பு வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கவும், அதே நேரத்தில் ஒரு அறக்கட்டளை அமைப்பதன் மூலம் கோவில் கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு இந்திய அரசுக்கு உத்தரவிட்டது” என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ‘டான்’ பத்திரிக்கை, “சர்ச்சைக்குரிய அயோத்தி தளத்தில் கோவில் கட்டப்பட வேண்டும், மசூதிக்கு மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Next Story