இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு ஜாமீன்


இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 11 Nov 2019 4:55 PM IST (Updated: 11 Nov 2019 4:55 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனர் வைத்த ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

செப்டம்பர் 12ந்தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்து இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் இருசக்கரவாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.  இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை கைது செய்தனர். பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபால்,  வேறுவழியின்றி போலீசாரிடம் சரணடைந்தார்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்தநிலையில், சிறையில் உள்ள ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும்,  இந்த வழக்கில் தொடர்புடைய மேகநாதன் என்பவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரணையில் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Next Story