சிலை கடத்தல் தடுப்பு விவகாரம்; பொன்.மாணிக்கவேல் ஒத்துழைக்க மறுப்பு: தமிழக அரசு வாதம்


சிலை கடத்தல் தடுப்பு விவகாரம்; பொன்.மாணிக்கவேல் ஒத்துழைக்க மறுப்பு:  தமிழக அரசு வாதம்
x
தினத்தந்தி 12 Nov 2019 2:18 PM GMT (Updated: 12 Nov 2019 2:18 PM GMT)

சிலை கடத்தல் தடுப்பு விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் அரசுடன் ஒத்துழைக்க மறுத்து வருகிறார் என தமிழக அரசு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30ந்தேதியுடன் ஓய்வுபெற்றார். அவரை மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட்டு உத்தரவு செல்லும் என்றும், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டு காலத்துக்கு சென்னை ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் கடந்த ஏப்ரல் 12ந்தேதி தீர்ப்பு கூறியது.

சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், அந்த வழக்குகள் தொடர்பாக யாரையும் கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், கடத்தல் வழக்கு தொடர்பான அறிக்கைகளை இத்துறையின் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவேண்டும் என்றும், அந்த அறிக்கையின் மீது அதிகாரி அபய்குமார் சிங் முடிவெடுப்பார் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 12ந்தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட சில முக்கியமான உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என்பதால் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், சிலை கடத்தல் விசாரணை குறித்து பொன்.மாணிக்கவேல் தெரிவிப்பதில்லை.  அவர் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. எந்த கூட்டங்களிலும் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.  ஆஸ்திரேலியாவில் இருந்து பொன்.மாணிக்கவேலின் முயற்சியால் சிலைகள் மீட்கப்படவில்லை.  அவை பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால் மீட்கப்பட்டு உள்ளன.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அரசுடன் ஒத்துழைக்க மறுத்து வருகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

Next Story