மாணவர்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேச்சு


மாணவர்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேச்சு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 7:02 PM GMT)

மாணவர்கள் டி.வி., செல்போன், கணினியில் அதிக நேரம் செலவிட கூடாது. நன்றாக படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கூறினார்.

வேலூர்,

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் நண்பர்கள் வார விழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. சைல்டு லைன் இயக்குனர் வெங்கட்ராமன், மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர்கள் ஸ்ரீபாதம், மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

பள்ளி மாணவ-மாணவிகள் எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். யாராவது உங்களுக்கு தொந்தரவு கொடுத்தால் எந்த நேரமானாலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். உங்களுக்கு உதவி செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் தயாராக உள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நல்ல விஷயம் நடந்தாலும், கெட்ட விஷயம் நடந்தாலும் அதனை பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று யாராவது பிரச்சினை செய்தாலும் பெற்றோர், ஆசிரியர்களிடம் கூற வேண்டும். எதையும் மறைக்க கூடாது.

மாணவர்கள் டி.வி., செல்போன், கணினியில் அதிக நேரம் செலவிட கூடாது. செல்போன், கணினியில் உள்ள விளையாட்டுகள் அடிமைப்படுத்தி விடும். அதன் மூலம் மனநிலையும் மாறுபட வாய்ப்பு உள்ளது. மேலும் படிப்பின் மீதான கவனம் சிதறி விடும். எனவே டி.வி., செல்போன், கணினியில் கொஞ்ச நேரம் மட்டுமே செலவிட வேண்டும். படிப்பு, விளையாட்டில் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும்.

மாணவர்கள் நன்றாக படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். பெரியவர்கள் மட்டும் அல்லாமல் வயதில் குறைந்தவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அனைவரையும் மதிக்கும் பண்புகளை வளர்த்து கொள்வது நல்லது. குழந்தைகள், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பிற்கு போலீஸ் முழுஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கைகளில் பள்ளி மாணவர்கள் நண்பர்கள் என்பதை குறிக்கும் வகையில் நட்பு கயிறு கட்டினர். குழந்தை திருமணம் மற்றும் பாலியல் கொடுமை குறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண் அடங்கிய பதாகை போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

இதில், இன்ஸ்பெக்டர்கள் அசோகன், நாகராஜ், ஆதிலிங்கம்போஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகேந்திரன், சிதம்பரம், காகிதப்பட்டறை அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

குழந்தைகள் நண்பர்கள் வார விழா வருகிற 20-ந் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது.

Next Story