மாநில செய்திகள்

தியாகராயநகரில் பரபரப்பு சம்பவம்: நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது + "||" + Demanding jewelery owner demanding Rs 1 crore

தியாகராயநகரில் பரபரப்பு சம்பவம்: நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது

தியாகராயநகரில் பரபரப்பு சம்பவம்: நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது
சென்னை தியாகராயநகரில் நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டிய வக்கீல்கள் உள்பட 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை, 

சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் சரவணா நகைக்கடை உள்ளது. இந்த கடையை ‘சரவணா ஸ்டோர்ஸ்’ யோகரத்தினத்தின் மகன் சிவ அருள்துரை (வயது 54) நிர்வகித்து வருகிறார். இந்த கடைக்கு கடந்த 3-ந்தேதி திருவேற்காடு சுந்தர கோபாலபுரம் ஏழுமலை நகரை சேர்ந்த தனசேகர்(27) என்பவர் நகை வாங்க வந்தார். பழைய தங்க நாணயங்களை கொடுத்து 3 பவுன் தங்க சங்கிலியை அவர் வாங்கினார்.

பின்னர் நகைக்கடையின் கழிவறைக்கு சென்று திரும்பிய அவர், இது போலியான நகை எனக்கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் “நான் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகையாளர் சங்கத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறேன். உங்கள் கடையில் போலி நகைகள் விற்கிறீர்கள்? என்று எல்லா தொலைக்காட்சிகளிலும் செய்தி வர வைப்பேன்” என்று மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து கடை ஊழியர்கள், உரிமையாளர் சிவ அருள்துரைக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் உடனடியாக கடைக்கு வந்தார். அப்போது அவரை மிரட்டி ரூ.15 லட்சத்தை தனசேகர் வாங்கி சென்றார்.

இந்தநிலையில் தனசேகர் 15 பேர் கொண்ட கும்பலுடன் நேற்றுமுன்தினம் அந்த நகைக்கடைக்கு மீண்டும் வந்தார். “உங்கள் கடை மீது அவதூறு செய்தி பரப்பாமல் இருக்க ரூ.1 கோடி பணம் கொடுக்க வேண்டும்” என்று உரிமையாளர் சிவ அருள்துரையை மிரட்டினர்.

அவரும் பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இதுபற்றி ரகசியமாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தியாகராயநகர் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் தலைமையில் போலீசார் நகைக்கடைக்கு விரைந்து சென்றனர்.

அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. எனினும் தனசேகர் உள்பட 9 பேர் போலீசாரின் பிடியில் சிக்கினர். மற்ற 6 பேரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். பிடிபட்ட நபர்களை மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனசேகர் போலி பத்திரிகையாளர் என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 4 போலி பத்திரிகை அடையாள அட்டை மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. சரவணா நகைக்கடையில் வாங்கிய நகை மீது பவுடரை தடவி போலி நகை என்று கூறி அவர் மிரட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிப்பட்ட மற்றவர்கள் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சையது அபுதாகீர் (49), அமனுல்லா(39), எர்ணாவூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த ஜெகதீசன்(25), கீழ்ப்பாக்கம் செக்ரேடிரியட் காலனியை சேர்ந்த ஸ்ரீராம்(27), கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்த முருகன்(40), வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஜீவா(47), திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த திருமால்(37), பல்லாவரம் பகுதியை சேர்ந்த தண்டபானி(24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில் ஜெகதீசன், அமனுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமால் ஆகிய 5 பேரும் வக்கீல்கள் ஆவார்கள். இந்த கும்பலிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.

அவர்கள் பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேசனும்(27) போலீசார் பிடியில் சிக்கினார்.

இந்த மோசடி கும்பல் இதே பாணியில் வேறு தொழில் அதிபர்களிடம் கை வரிசை காட்டி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவானவர்களை நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகிறார்கள்.

தமிழகத்தில் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் போலி பத்திரிகையாளர்கள் சிலர் போலி அடையாள அட்டையை அச்சிட்டும், பத்திரிகையாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறி கட்டப்பஞ்சாயத்து வேலைகளில் ஈடுபட்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த நபர்களை கண்டுபிடித்து தமிழக அரசும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.