‘மதங்களை விட மனங்களால் இந்தியா இணைக்கப்படுவதே சிறந்தது’ கவிஞர் வைரமுத்து பேச்சு


‘மதங்களை விட மனங்களால் இந்தியா இணைக்கப்படுவதே சிறந்தது’ கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:15 PM GMT (Updated: 14 Nov 2019 8:23 PM GMT)

மதங்களை விட மனங்களால் இந்தியா இணைக்கப்படுவதே சிறந்தது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

சென்னை, 

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் கடந்த ஜூன் 14-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 23 பேருக்கு யுவ புரஸ்கார் விருதும், 23 பேருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டன.

இந்தநிலையில் பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கும் விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். விழாவில் 21 பேருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதுடன் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

மதங்களால் இணைக்கப்படுவதை விட மனங்களால் இந்தியா இணைக்கப்படுவதே சிறந்தது. மனங்களை இணைக்கும் ஒரே கலை இலக்கியம், ஒரே களம் சாகித்ய அகாடமி. சிறுவர் இலக்கியம் தான் ஒரு குழந்தையின் முதல் கல்வி. தாய்மொழியின் ஒலி தான் ஒரு குழந்தையின் முதல் சங்கீதம். சிறுவர் இலக்கியத்தில் தான் தொடங்குகிறது ஒரு தலைமுறையின் நேர்கோடு. குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதை விட கற்பனை கொடுங்கள். அந்த கற்பனையின் முதல் வித்து சிறுவர் இலக்கியம் தான்.

ஒரு குழந்தையை பார்த்து எத்தனை மதிப்பெண் பெற்றாய்? எத்தனை பரிசு வாங்கினாய்? எத்தனை மொழிகள் கற்கிறாய்? எதிர்காலத்தில் என்னவாக வருவாய்? என்று கேட்பவன் குழந்தைகள் மீது வன்முறை செய்கிறான். எத்தனை பட்டாம்பூச்சி பிடித்தாய்? எத்தனை முறை வானவில் பார்த்தாய்? எத்தனை மழைத்துளிகளை உள்ளங்கையில் உருட்டினாய்? எத்தனை பவுர்ணமியோடு பந்து விளையாடினாய்? என்று கேட்பவன் தான் குழந்தையின் மூளையில் பூச்செடிகள் நடுகிறான்.

இந்தியாவின் எல்லா கல்விக்கூடங்களிலும் சிறுவர்களுக்கென்று தனி நூலகம் அமைத்துக்கொடுங்கள். கண் வழியாக மட்டுமல்ல காது வழியாகவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். சீனாவை விட இந்தியாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகம். அதை ஏன் குழந்தை இலக்கியங்களுக்கும் நீட்டிக்கக்கூடாது?.

இவ்வாறு அவர் பேசினார்.

விருது பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர் தேவி நாச்சியப்பனும் ஒருவர். குழந்தைகள் இலக்கியத்தில் மொத்த பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. சென்னையில் வசிக்கும் இவர் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவின் மகள் ஆவார்.

முன்னதாக சாகித்ய அகாடமி செயலாளர் கே.சீனிவாசராவ் வரவேற்றார். துணைத்தலைவர் மாதவ் கவுசிக் நன்றி கூறினார்.

Next Story