தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Nov 2019 2:03 AM IST (Updated: 17 Nov 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

புதுச்சேரி உறவையூரி கிராமத்தில் ‘ஷூ’ தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பலருக்கு கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2001-ம் ஆண்டு நவம்பர் வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு தொகை செலுத்தவில்லை. இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி, பணத்தை செலுத்த உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மண்டல ஆணையரிடம் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால், அவர் உதவி ஆணையரின் உத்தரவை சரி என்று கூறி உறுதி செய்தார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ‘ஷூ’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள்தான், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்று வாதிட்டார். இதையடுத்து, ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்த வேண்டும் என்ற மண்டல ஆணையரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக வக்கீல்கள் வாதத்தின்போது தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் செய்தால், தீர்ப்பாயத்தின் நீதிபதி கண்டுகொள்வது இல்லை என்றும், மாறாக கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கை 2020-ம் ஆண்டு மே மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டதாகவும் வக்கீல்கள் கூறினர்.

இதுபோன்ற செயல்களினால் தொழிலாளர்கள் தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்காகத்தான் இதுபோன்ற தீர்ப்பாயங்களே அமைக்கப்பட்டன. வழக்குகளின் விசாரணை தாமதம் ஏற்பட்டதால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை காலதாமதம் ஆன காலத்துக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கவேண்டிய நிலை வரும் என்பதால், தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

தங்களது வழக்குகள் முடிவுக்கு வந்தாலும், அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலை சில தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது. எனவே, தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கு உத்தரவிடுகிறேன். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story