மாநில செய்திகள்

பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த நடிகர் விஜய் ரசிகர்கள் - சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது + "||" + 2 farmers stuffed debt Actor Vijay fans

பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகள் கடனை அடைத்த நடிகர் விஜய் ரசிகர்கள் - சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது

பேனர் வைப்பதை தவிர்த்து,  2 விவசாயிகள் கடனை அடைத்த நடிகர் விஜய் ரசிகர்கள் - சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது
பேனர் வைப்பதை தவிர்த்து 2 விவசாயிகளின் கடனை நடிகர் விஜய் ரசிகர்கள் அடைத்துள்ளனர். அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
தேனி,

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது படத்துக்கு பேனர்கள் வைப்பதை ரசிகர்கள் தவிர்க்குமாறு கூறினார். அதையொட்டி தேனியில் விஜய் ரசிகர்கள், பிகில் திரைப்படத்தை முன்னிட்டு பேனர் வைப்பதை தவிர்த்தனர்.


இந்தநிலையில் தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பேனர் வைப்பதற்கு பதில் விவசாயிகளின் கடனை அடைத்து அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கொடுவிலார்பட்டி அருகில் உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி முனியாண்டி கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய கடன் தொகை ரூ.49 ஆயிரத்து 950 மற்றும் ஜெயமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்கிய ரூ.46 ஆயிரம் கடன் ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் நேற்று முன்தினம் அடைத்தனர்.

விவசாயிகள் இருவரின் கடன் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான ரசீதுகளை அவர்களிடம் வழங்கி, அந்த விவசாயிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கி, ரசீதுகளை வழங்கி விவசாயிகளுக்கு பச்சை துண்டு அணிவித்து கவுரவித்தார்.

விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.