சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Nov 2019 8:30 PM GMT (Updated: 17 Nov 2019 8:30 PM GMT)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம்,

சிதம்பரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவருடைய மனைவி லதா (வயது 51). இவர் ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் ராஜேசுக்கு(21) நேற்று முன்தினம் பிறந்த நாள். இதற்காக லதா, சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

தெற்கு கோபுரம் அருகே உள்ள முக்குருணி விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு இருந்த சிதம்பரத்தை சேர்ந்த தீட்சிதர் தர்ஷன் என்பவரிடம் அர்ச்சனைக்காக கொண்டு வந்த கூடையை கொடுத்தார். அப்போது லதா, தனது மகன் பெயர் மற்றும் ராசி, நட்சத்திரத்தை கூறுவதற்குள் தீட்சிதர் தர்ஷன் கருவறைக்குள் சென்று, அர்ச்சனை செய்து முடித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, ராசி, நட்சத்திரத்தை கேட்காமலேயே அவசர அவசரமாக அர்ச்சனை செய்துவிட்டீர்களே என்று கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த தீட்சிதர் தர்ஷன், நீயே உள்ளே சென்று அர்ச்சனை செய்ய வேண்டியது தானே? என்று கூறியுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தர்ஷன் திடீரென லதாவின் கன்னத்தில் அறைந்தார். இதை பார்த்த சக பக்தர்கள் இதுபற்றி தர்ஷனிடம் கேட்டபோது, அவர் சரியான முறையில் பதில் அளிக்காமல், எனது செயினை அறுக்க வந்ததாக பக்தர்களிடம் கூறினார்.

உடனே லதா, சாமி கும்பிட வந்தால் செயினை அறுக்க வந்ததாக பொய் கூறுகிறீர்கள் என்று கூறி ஆதங்கப்பட்டார். சக பக்தர்கள், தீட்சிதரின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து லதா சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீட்சிதர் தர்ஷன் மீது ஆபாசமாக திட்டுதல், கையால் அடித்து கீழே தள்ளியது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தலைமறைவான தர்ஷனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிகளை மீறி ஆடம்பர திருமணம் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story