மேலவளவில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளை முன்கூட்டி விடுவித்ததற்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி அதிகாரிகள் இன்று ஆஜராக உத்தரவு
மேலவளவில் 7 பேர் கொலை வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, உரிய அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர்.
மதுரை,
கடந்த 1997-ம் ஆண்டு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்பட 7 பேரை ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் மீதான தண்டனையை உறுதி செய்தது.
இதையடுத்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஏற்கனவே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலவளவு கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான அரசாணை நகலை வழங்கக்கோரி மூத்த வக்கீல் ரத்தினம் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் அதிருப்தி
அந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “எந்த அடிப்படையில் மேலவளவு கொலை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்? சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு அவர்களின் தண்டனையை உறுதி செய்த போதும், முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன்? இந்த விஷயத்தை தமிழக அரசு எளிதாக கையாண்டு இருப்பது அதிருப்தியை அளிக்கிறது. இதனால் மேலவளவு கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல்தான் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்” என்றனர்.
பின்னர், 13 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு ஆவணங்களை சமர்ப்பித்து, உரிய அதிகாரிகள் 19-ந் தேதி (அதாவது இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story