சமூக வலைதளங்களில் தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, எதையும் பகிர்வதோ கூடாது - போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்
சமூக வலைதளங்களில் தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, எதையும் பகிர்வதோ கூடாது என பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை,
குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சென்னை போலீஸ் கமிஷனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'போக்சோ சட்டம்' குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, 'இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது. பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு அவசியம். சமூக வலைதளங்களில் தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, எதையும் பகிர்வதோ கூடாது.
சென்னை முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றத்தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலமாகவே நடத்தப்படுகின்றன' என கூறினார்.
Related Tags :
Next Story