மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் - அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளதையடுத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது:-
* உள்ளாட்சித்தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு குழப்பம் செய்கிறது - திமுக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.
* மேயரை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது. மக்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்காமல், கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுப்பது தற்கொலைக்கு சமம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
* மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் - பாஜக எஸ்.ஆர்.சேகர்.
* மேயர் பதவி தொடர்பாக அவசர அவசரமாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக அரசு தங்களை தற்காத்துக்கொள்ளவே மறைமுக தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளார்கள். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் எனில் நேரடித்தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
* ஏற்கனவே மறைமுக தேர்தலில் கிடைத்த அனுபவத்தின் மூலம்தான் 2011ல் நேரடி தேர்தல் கொண்டுவரப்பட்டது, தற்போது மீண்டும் மறைமுக தேர்தல் கொண்டு வருவது ஏற்புடையதல்ல - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்.
* ஏற்கனவே ஆட்சி செய்த கட்சிகளும் மறைமுக தேர்தல் முறையை பின்பற்றியுள்ளார்கள் - தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்.
Related Tags :
Next Story