“கமல்ஹாசன் முதல்-அமைச்சராக வரவே விரும்புகிறேன்” நடிகை ஸ்ரீபிரியா பேட்டி
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்தாலும் கமல்ஹாசன் முதல்-அமைச்சராக வருவதையே விரும்புகிறேன் என்று நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பரபரப்பு பேட்டியில் கூறியதாவது:-
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று கூறியிருப்பது நல்ல தொடக்கமாக நான் கருதுகிறேன். 2 சக்திவாய்ந்த தலைவர்கள் இணையும்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். மாற்றம் நிகழவேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயமாக நடந்தே தீரும். ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்தாலும், எங்கள் தலைவர் கமல்ஹாசன் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பதையே விரும்புகிறேன். சட்டசபை தேர்தல் முடிவு இதற்கான சாத்தியக்கூறை ஏற்படுத்தி கொடுக்கும்.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். அதற்காக சினிமாவில் இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் சொல்லவில்லை. மக்கள் உடனான தொடர்பு அதிகமாக இருப்பதால், கலைத்துறையில் உள்ளவர்கள் அரசியலில் ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பிறக்கும்போதே அனைவரும் அரசியல்வாதியாக பிறப்பது இல்லை. மக்களோடு இணைந்து பழகும்போது தான், அவர்களுடைய தேவையை புரிந்துகொள்ளமுடியும். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. மக்களுடைய வாக்குகள், தீர்ப்பே அதனை தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் அரசியலில் இணைந்து செயல்படுவது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நடிகை ஸ்ரீபிரியா கமல்ஹாசன் முதல்-அமைச்சராக வரவே விரும்புகிறேன் என்று தெரிவித்திருப்பது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு, அவருடைய பேச்சு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story