மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும்துபாய் தொழில் அதிபர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு + "||" + Dubai Business Principals Meeting with Edappadi Palanisamy

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும்துபாய் தொழில் அதிபர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும்துபாய் தொழில் அதிபர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் துபாய் தொழில் அதிபர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை,

வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்தனர். அதோடு, 35 ஆயிரத்து 520-க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இப்பயணத்தின் நிறைவுப் பகுதியாக துபாயில் இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் அதிபர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில் 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 10 ஆயிரத்து 800 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தலைமையில் நேற்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட துபாய் தொழில் அதிபர்கள், கூட்டமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எந்தெந்த நிறுவனம்?

இதில், துபாய் தொழில் அதிபர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஜெயின்ட் குழுமத்தின் தலைவர் சுதேஷ் அகர்வால், இந்திய வர்த்தக கண்காட்சி மையத்தின் இயக்குனர் ஸ்ரீபிரியா குமாரியா, சன்னி குழுமத்தின் தலைவர் சன்னி குரியன், ஓசன் ரப்பர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கே.எம்.நூர்தீன், ப்ரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் முகேஷ் கோச்சார், காம்ரோ சர்வதேச நிறுவனத்தின் துணைத் தலைவர் வின்சென்ட் ஜோஸ் நீவ்ஸ், பி.ஏ.சி.இ. குழுமத்தின் தலைவர் பி.ஏ.இப்ராஹிம், இ.எஸ்.பி.ஏ. குழுமத்தின் பங்குதாரர் ஸ்வேதா பாலசுப்பிரமோணி, அப்பேரல் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்சில் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆக்கமும், ஊக்கமும்

இக்குழுவினரிடையே கலந்துரையாடிய முதல்-அமைச்சர், தொழில் தொடங்கிட தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள துபாய் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பினரை வரவேற்றதோடு, இந்நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். புதிய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

பின்னர் இக்குழுவினர், தொழில் திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு அளித்துவரும் ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

பங்கேற்றோர்

இந்தக் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி,

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நீரஜ்மிட்டல், தொழில் துறை சிறப்புச் செயலாளர் வி.அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அழைப்பு

இந்த சந்திப்புக்கு பின் நிருபர்களுக்கு, துபாய் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா அளித்த பேட்டி வருமாறு:-

துபாய்க்கு வருகை தந்திருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று துபாய் முதலீட்டாளர்கள் இங்கு வந்துள்ளனர்.

முதல்-அமைச்சரை சந்தித்து தொழில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். அதன்படி, பயோ டீசல், கடல் உணவுகள் ஏற்றுமதி, தளவாடங்கள் உற்பத்தி, சுகாதார துறைகளின் மூலம் ரூ.3,500 கோடி மதிப்பில் தொழில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்படி

மேலும் துபாயில் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவாக துபாய் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. புதிதாக 9 நிறுவனங்கள் தொடங்குவதற்கான நிலங்களை 3 மாதத்திற்குள் கண்டறிந்து, அனைத்து பணிகளையும் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் துபாய் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முதல்படி எடுத்து வைத்துள்ளோம். முதல்- அமைச்சர் எங்களுக்கு நல்ல வகையில் ஒத்துழைப்பு அளித்தார். புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்படுவதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.