சிலை கடத்தல் வழக்குகளில் எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? பதில் அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சிலை கடத்தல் வழக்குகளில் எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? பதில் அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Nov 2019 11:43 PM GMT (Updated: 20 Nov 2019 11:43 PM GMT)

கடந்த ஓராண்டு காலத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சிறப்பு அதிகாரிக்கு அலுவலகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஒதுக்கி தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

குற்றப்பத்திரிகை

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, ‘சிறப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பித்து உள்ளதோ? அதன் அடிப்படையில் தான் சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இதுவரை ரூ.31 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை சிறப்பு அதிகாரி ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை’ என்று வாதிட்டார்.

தெய்வீக பூமி

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அறிக்கையை கூடுதல் டி.ஜி.பி.யிடம் தர வேண்டும் என்று தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கக்கூடாது என எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

தமிழகம் பழமையும், கலாசாரமும் மிக்க தெய்வீகமான பூமி. இங்குள்ள புராதன கோவில் சிலைகள், மரகத லிங்கங்களின் மதிப்பை விலை நிர்ணயம் செய்துவிட முடியாது. இந்த புண்ணிய பூமியில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க வேண்டும், பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த துறையில் அனுபவம் அதிகம் கொண்ட பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்தோம். ஆனால், தமிழக அரசு இந்த வழக்குகளை விசாரிக்க மற்றொரு பிரிவை உருவாக்கி உள்ளது’ என்று கருத்து தெரிவித்தனர்.

பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.செல்வராஜ், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால், சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தனது பணியை தொடங்கவே 6 மாதங்களாகி விட்டது. அவர் தனது பணியை செய்வதற்கு அரசும், போலீஸ் உயர் அதிகாரிகளும் தான் இடையூறு செய்தனர்.

ஐகோர்ட்டு பிறப்பித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை. 160 வழக்குகள் இன்னும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்படவில்லை. இதில் 31 வழக்குகளின் புலன் விசாரணை கோப்புகள் மாயமாகி விட்டன. அவற்றை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றார்.

எத்தனை குற்றப்பத்திரிகைகள்?

இதைத்தொடர்ந்து, அரசு பிளடர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், வக்கீல் யானை ராஜேந்திரன் ஆகியோர் வாதிட்டனர். இந்த விசாரணையின்போது, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலும் ஆஜராகி இருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமித்து உத்தரவிட்டோம். இந்த ஓராண்டு காலத்தில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து பொன் மாணிக்கவேல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுபோல, இந்த சிறப்பு பிரிவுக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகளின் ஊதியம் நீங்கலாக தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்துள்ளது? என்பது குறித்து தமிழக அரசு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story