உள்ளாட்சித்தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
தோல்வி பயத்தால் யாராவது கோர்ட்டுக்கு சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா? என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் அகற்றம் போன்ற அத்தியாவசியப் பணிகளைச் செய்யவேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல், கடந்த மூன்றாண்டுகளைக் கடத்தியவர்கள் தான், இந்த ஆட்சியாளர்கள். ஆனால், பழியையோ ஆட்சியில் இல்லாத தி.மு.க. மீது போட்டார்கள். நியாயமாக இட வரையறையுடன் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் கோரிக்கை. அதைச் செய்யாமல், தேர்தலை, தள்ளிப்போட்டுக் கொண்டே போனார்கள்.
இப்போது கூட, மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் உள்ளாட்சித்தேர்தலை, சர்வாதிகார முறையிலே நடத்தப் பார்க்கிறார்களே தவிர, நியாயமாக நேர்மையாக நடத்திட அ.தி.மு.க. அச்சப்படுகிறது. அந்த அளவிற்குத் தோல்வி பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. யாராவது கோர்ட்டுக்கு சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம்தள்ளிவிடலாம் என்ற எண்ணத்தில் நேரடித்தேர்தல் முறையை அறிவித்துவிட்டு, நீதிமன்றங்களில் குட்டுகள் வாங்கியதும் இனி தேர்தலைத் தள்ளிப்போடும் சூழல் இருக்காது என நினைத்து, தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து, அதிகார அத்துமீறலுக்காக, தனது முடிவையே மாற்றிக்கொண்டு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா?.
தேர்தல் என்றால் மக்களைச் சந்திக்க வேண்டும். அதை அப்படியே தவிர்த்து விட்டு, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அத்துமீறல் செய்யலாம் என்பதுதான் ஆளும் தரப்பின் மனக்கணக்கு. அதனை மகத்தான மக்கள் சக்தியுடன் முறித்துப் போடும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உண்டு. ஏனென்றால் நாம் எப்போதும் மக்கள் பக்கம் நிற்கிறோம். மக்களைச் சந்திக்கவே அஞ்சுகிறார்கள், ஆளுங்கட்சியினர்; நாம் மக்களுக்காக நாளும் உழைக்கிறோம், வலிமையாகக் குரல் கொடுக்கிறோம், தேவையான கோரிக்கைகளை வைக்கிறோம், தொடர்ந்து போராடுகிறோம்.
பேரெழுச்சி மிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.க.வுக்கு உண்டு. அந்த உணர்வுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் களம் காணுங்கள். மக்களுடன் நாம், நம்முடன் மக்கள் என்பதற்கேற்ப, மக்களுக்காக எப்போதும் குரல் கொடுங்கள். மாற்றம் காண ஓயாது உழைத்திடுங்கள். உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை தில்லு முல்லுகள் வேண்டுமானாலும் செய்ய முயற்சிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் நல்லாட்சி என்பது தி.மு.க.வால் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்ற, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள்; மக்களுடன் இணைந்து போரா டுங்கள். தமிழ்நாட்டின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வழக்குகளை திரும்ப பெறவேண்டும்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளத்தில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் நோக்கத்தோடு போடப்பட்ட வழக்குகளை அரசு இன்னும் திரும்பப்பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகள் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story