மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு சிறை


மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 22 Nov 2019 10:18 AM GMT (Updated: 22 Nov 2019 10:18 AM GMT)

துப்பாக்கியை காட்டி 2-வது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 2 முறை திருவாரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அசோகன்.  2006-ம் ஆண்டு இவர், தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் 2-வது மனைவி ஹேமாவுடன் வசித்து வந்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர், 6-ம் தேதி, ஹேமா தனது கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அசோகனின் உதவியாளரை அழைத்துக் கொண்டு, சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் விநியோகிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.

உதவிப் பொருள்களை வழங்கிவிட்டு இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, மது போதையில் இருந்த அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு, தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், ஹேமாவையும், அவரது தாயாரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு, தன் கைத்துப்பாக்கியை காட்டி அசோகன் மிரட்டியதாகவும், அப்போது, வீட்டிற்குள், இரண்டு முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

ஹேமா அளித்த புகாரின் அடிப்படையில் அசோகன் மீது பட்டினப்பாக்கம் போலீசார்  கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சாந்தி அமர்வில் நடைபெற்றது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, அசோகன் மீதான குற்றசாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வதாக கூறியதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

Next Story