வரலாறு காணாத விலை உயர்வு: முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை
வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வுக்கு காரணம் என்ன? என்பது குறித்து வியாபாரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
மனிதர்களின் உணவு பட்டியலில் மருத்துவ குணம் செறிந்துள்ள முருங்கைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. பூ, இலை மற்றும் காய் என மூன்று பரிணாமங்களில் முருங்கை பயன்கொடுத்து வருகிறது என்றால் அது மிகையல்ல. முருங்கைக்காய் இல்லாத சாம்பார் மணக்காது என்பார்கள். அந்த அளவுக்கு முருங்கைக்காய் பலரின் விருப்ப பட்டியலில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. விலை விண்ணை தொட்டுள்ளதால் முருங்கைக்காய் தற்போது எட்டாத காயாக மாறிவிட்டது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் தரத்துக்கு ஏற்ப ரூ.120 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று, ஒரு கிலோ முருங்கைக்காயை ரூ.220 வரையிலும் விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாவே இதே விலை உயர்வு நீடிப்பதால், பெரும்பாலான இல்லத்தரசிகள் முருங்கைக்காயை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள்.
வரலாறு காணாத விலை
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் முருங்கைக்காய் மொத்த வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
மராட்டிய மாநிலம் மும்பை, நாசிக், குஜராத் மாநிலம் பரோடா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, அரியலூர், ஜெயங்கொண்டான் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் முருங்கைக்காய் பெரும்பாலும் கொண்டுவரப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 400 மூட்டைகளில் முருங்கைக்காய் வருவது வழக்கம். ஆனால் தற்போது வெறும் 40 முதல் 50 மூட்டைகளே வருகிறது.
இதனால்தான் முருங்கைக்காய் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் லோடு ஏற்றினால் கட்டுப்படியாகாது என்பதால், தற்போது ரெயில்களில் முருங்கைக்காய் கொண்டுவரப்படுகிறது.
விளைச்சல் பாதிப்பு
தமிழகம் உள்பட தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்வதால் முருங்கைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது மழை பெய்யும்போது முருங்கை பூ உதிர்ந்துவிடுவதால் காய்க்காது. வெயில் காலங்களிலேயே முருங்கை காய்க்க தொடங்கும். மழை நின்றால் தான் விளைச்சல் அடைந்து, முருங்கைக்காய் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறிகள்
முருங்கைக்காய் மற்றும் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் சில காய்கறிகளின் விலை 15 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
தக்காளி ரூ.20 (மாற்றம் இல்லை), பீன்ஸ் ரூ.40 (ரூ.50), முட்டைகோஸ் ரூ.20 முதல் ரூ.25 (ரூ.30), கேரட் ரூ.40 முதல் ரூ.50 (ரூ.50 முதல் ரூ.60), பீட்ரூட் ரூ.35 (ரூ.50), பச்சை பட்டாணி ரூ.60 (ரூ.130), கத்திரிக்காய் ரூ.25 முதல் ரூ.30 (ரூ.50), அவரைக்காய் ரூ.40 (ரூ.60), பாகற்காய் ரூ.30 (ரூ.40), சேனை கிழங்கு ரூ.25 (ரூ.30), சேப்பை கிழங்கு ரூ.25 (ரூ.35), வெண்டைக்காய் ரூ.35 (ரூ.40),
புடலங்காய் ரூ.30 (ரூ.25), முள்ளங்கி ரூ.20 (ரூ.30), சுரைக்காய் ரூ.15 (ரூ.20), இஞ்சி ரூ.70 (ரூ.120), பச்சை மிளகாய் ரூ.25 (ரூ.30), உருளைக்கிழங்கு ரூ.20 (மாற்றம் இல்லை), வாழைக்காய் (ஒன்று) ரூ.6 (ரூ.6), தேங்காய் (ஒன்று) ரூ.25 (ரூ.25), கீரை வகைகள் ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.12 (ரூ.15 முதல் ரூ.18).
* கடந்த வார விலை அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story