சட்டவிரோத பேனர்களால் உயிர்பலி: இழப்பீட்டு தொகையை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


சட்டவிரோத பேனர்களால் உயிர்பலி: இழப்பீட்டு தொகையை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 22 Nov 2019 11:44 PM GMT (Updated: 22 Nov 2019 11:44 PM GMT)

சட்டவிரோத பேனர்களால் ஏற்படும் உயிர்பலிக்காக வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை அரசியல் கட்சிகளிடம் வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தனது இல்லத் திருமண விழாவுக்காக நடுரோட்டில் வைத்திருந்த பேனர் சரிந்து, சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் மற்றும் சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, சுபஸ்ரீ சம்பவத்தில் கடமையை செய்யத்தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இடைக்கால நிவாரணமாக சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு இருந்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

தன் மகள் சுபஸ்ரீ பலியானதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும் என்று கூறி சுபஸ்ரீயின் தந்தை ரவி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, டிஜிட்டல் பேனர் அச்சக உரிமையாளர்கள், மூலப்பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆகியோர் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு கள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமலியாஸ் ஆஜராகி, ‘சுபஸ்ரீ பலியான சம்பவம் தொடர்பாக ஜெயகோபால் உள்ளிட்டோர் மீது பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தனர். இந்த 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளையும் சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் போலீசார் தாக்கல் செய்து விட்டனர்’ என்று கூறினார்.

வரிப்பணம்

இதையடுத்து, சுபஸ்ரீயின் தந்தை தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் பதில் மனுவை அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் தாக்கல் செய்தார். அதில், ‘சுபஸ்ரீ மரணத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘இதுபோன்ற துயர சம்பவம் நடக்கும்போது, பலியானவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, பெரும் தொகை இழப்பீடு என்று வழங்கப்படுகிறது.

சட்டவிரோதமாக பேனர் களை வைத்து விபத்து நடக்கிறது. அரசியல் கட்சிகள் செய்த இந்த தவறுக்காக, மக்களின் வரிப்பணத்தில் இருந்து எப்படி இழப்பீடு வழங்கப்படுகின்றன? இந்த இழப்பீடு தொகை அரசு கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து ஏன் வசூலிக்கக்கூடாது? அவ்வாறு வசூலிக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

கொடி கம்பம்

இதன்பின்னர், கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி என்பவர் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அரசியல் கட்சி வைத்த கொடி கம்பம் அவர் மீது சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

இந்த விவரத்தை நீதிபதிகளிடம் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததால் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கவில்லை. இதுகுறித்து விரிவான வாதம் செய்ய உள்ளேன்’ என்றார். இதையடுத்து இந்த வழக்குகள் அனைத்தையும் வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story