அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் - வானிலை நிபுணர்கள்


அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் - வானிலை நிபுணர்கள்
x
தினத்தந்தி 23 Nov 2019 8:34 AM GMT (Updated: 23 Nov 2019 8:34 AM GMT)

அடுத்த வார இறுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடையக்கூடும் என்றும் இதனால் நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் மட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

சென்னை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சம்பா நெல் பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் மிதமான மழை இரண்டு நாட்கள் தொடரும் என்று  வானிலை ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். அடுத்த வார இறுதியில் மழை தீவிரமடையக்கூடும் என்றும் இது நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் மட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

வானம் மேகமூட்டமாக இருக்கும். மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி சி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி சி  ஆக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஸ்கைமெட் வானிலை ஆய்வு மைய தகவலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கும் மேகங்களின் பாதை" காரணமாக மழை பெய்கிறது.  சென்னையில் 40 சதவீதம்  வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்து உள்ளது.  மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நவம்பர் இறுதிக்குள் நிலைமை மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வெதர் மேன்  பிரதீப் ஜான் கூறும் போது  "வெப்பமண்டல வானிலையின் ஏற்ற இறக்கமான மேடன்-ஜூலியன் ஊசலாட்டம், மேகத்தின் துடிப்பு மற்றும் மழைப்பொழிவு கிழக்கு நோக்கி நகரும், நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்திற்குள் மாநிலத்திற்கு அதிக மழை கிடைக்கும் " என்று கூறி உள்ளார்.

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, திருமருகல், கீழ்வேளூர், எட்டுக்குடி, திருமணங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால், செண்பகத் தோப்பு வனப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மீன் வெட்டி பாறை அருவி மற்றும் பேயனார் ஓடைகளில் திடீர் என்று நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து, அங்கு குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேறினர். அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தின் முன்பு நின்று, செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Next Story