‘விவசாயிகளின் விடாமுயற்சி குணம் நமக்கு இருக்க வேண்டும்’ மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு


‘விவசாயிகளின் விடாமுயற்சி குணம் நமக்கு இருக்க வேண்டும்’ மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 23 Nov 2019 10:15 PM GMT (Updated: 23 Nov 2019 8:55 PM GMT)

விவசாயிகளின் விடாமுயற்சி குணம் நமக்கு இருக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகமும், கோவை இ.பி.ஜி. பவுண்டேஷன் நிறுவனமும் இணைந்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாறான ‘நேர்மையின் பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடத்தின.

இந்த விழாவுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் பெற்றுக்கொண்டார். இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.முருகேசன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

விவசாயிகளின் விடாமுயற்சி

நேர்மை, விடாமுயற்சியுடன் நியாயமாக முன்னேறி வருவது பெரிய விஷயம். அதற்கு உதாரணமாக இருப்பவர் பாலகுருசாமி. வாழ்க்கை என்ற தேர்வில் வெற்றி பெறுவதற்கு இவரின் நேர்மையான பயணம் என்ற புத்தகம் உதவும். விவசாய குடும்பத்தில் இருந்து முதல் முறையாக பட்டதாரியாகவும், தொழிலிலும் முன்வந்தார் என்று சொல்வார்கள்.

எந்த தொழிலையும் ஏளனமாக பார்க்க தேவையில்லை. அவற்றில் இருந்தும் நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். விவசாயிகளை பொறுத்தவரையில் மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பயன் இருந்தாலும், இல்லாமல் போனாலும் அவர்கள் அடுத்த அறுவடையை நோக்கி செல்வார்கள்.

அவர்களிடம் அந்த விடாமுயற்சி இருக்கிறது. அதனால்தான் அவர்களின் தற்கொலை நம் அனைவருக்கும் குத்துகிறது. விவசாயிகளிடம் காணப்படும் விடாமுயற்சி குணம் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். விடாமுயற்சி என்ற குணத்தை இறுதி வரை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆசிரியர்களை மறக்கக்கூடாது

உதவியை உதவியாக பார்க்காமல் அதை ஒரு படிக்கட்டாக நினைத்தால் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். அதை எப்போதும் மறக்கக்கூடாது. உதவியை பெருந்தன்மையாக சொல்ல வேண்டும்.

ஆசிரியர்கள் உதவி இல்லாமல் ஒருவரும் முன்னேறி இருக்க முடியாது. எனவே எவ்வளவு ஏழ்மையாகவோ, பணக்காரனாகவோ இருந்தாலும் அவர்களை மறக்கக்கூடாது.

அது மத குருவோ, பல்கலைக்கழக குருவோ. நல்லதை கற்றுக்கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் குருதான். நல்ல குணங்களை சொல்லி தருபவர்களை குருவாகத்தான் பார்க்கிறோம். குரு வேறு, ஆசிரியர் வேறு இல்லை. நேர்மையின் பயணம் மிகவும் கடுமையானது. அதில் விடாமுயற்சி இருந்தால் எளிது.

இவ்வாறு அவர் பேசினார்.

நேர்மையின் பயணம் நூலின் நூலாசிரியர் பா.கிருஷ்ணன் நூலை குறித்து பேசினார். கோவை இ.பி.ஜி. பவுண்டேஷன் செயலாளர் பிந்து விஜயகுமார் வரவேற்புரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எல்.கருணாமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story