உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் தாக்கு


உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் தாக்கு
x
தினத்தந்தி 23 Nov 2019 11:30 PM GMT (Updated: 2019-11-24T04:15:12+05:30)

அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வின் வண்ணம்

தென்காசி புதிய மாவட்ட தொடக்கவிழாவில் பேசிய முதல்-அமைச்சர், பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து 5 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் ஒரே நேரத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்கு பெற்றிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதவியேற்றதிலிருந்தே அ.தி.மு.க., பா.ஜ.க.வாக வண்ணம் பூசிக் கொண்டதை மறைக்க மிகவும் சிரமப்பட்டு புதிய கதை ஒன்றை விட்டிருக்கிறார்.

புதிய மருத்துவக்கல்லூரிகள் என்கிறார், என்ன பயன்?. ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுத் தொகுப்பில் 5,530 மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போனதே. இதுவரை முதல்-அமைச்சர் ஏன் அதுபற்றி வாய் திறக்கவில்லை?. தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குள் வரவே முடியாமல் இருந்த நீட் தேர்வை, அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சரால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?.

தடுத்தது யார்?

எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் சீரழிக்கப்படும். அந்த சீரழிவிலிருந்து மீட்கத்தான் தி.மு.க. ஆட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் 2011-ம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை தொடரும் அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளின் நிலை என்ன?. 2016-ல் இருந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

நீங்கள் சொல்வது போல் நடப்பது அ.தி.மு.க. ஆட்சிதானே. இந்த ஆட்சியில் மேயர்களுக்கு நேரடித்தேர்தல் என்று முதலில் 2018-ல் சட்டம், பிறகு நேரடித் தேர்தல் தான் என்று முதல்-அமைச்சரே பேட்டி. ஆனால் ஒரே வாரத்தில் மறைமுகத் தேர்தல் என்று அவசர சட்டம், ஏன் இந்த குழப்பமும் குளறுபடியுமான கொள்கை மாற்றம்?. உங்கள் ஆட்சியில், உங்களை உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட விடாமல் தடுத்தது யார்?. இதுதான் தி.மு.க.,வின் கேள்வி.

வெட்கப்பட வேண்டும்

திடீர் அவசரச் சட்டம், தேர்தல் ஆணையச் செயலாளர் மாற்றம், வார்டு வரையறைகளில் குளறுபடி, பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வார்டு வரையறை செய்யாதது என்று அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சித்தேர்தலை நடத்தவிடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும். தி.மு.க. மத்திய ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்தத் திட்டத்தைத் தந்தார்கள் என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் வந்த திட்டங்களை நான் சட்டமன்றத்திலேயே பட்டியலிட்டுள்ளேன். மக்களைச் சந்திக்காத மக்கள் நலனைக் காது கொடுத்துக் கேட்காத முதல்-அமைச்சர், சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக் கூட கவனிப்பது இல்லை என்பது இப்போதுதான் நாட்டு மக்களுக்குத் தெரிகிறது. ஆகவே, தி.மு.க.வின் திட்டங்களை அறிய முதலில் சட்டமன்ற பதிவேடுகளை எடுத்துப் படியுங்கள். அல்லது தற்போதுள்ள ஒவ்வொரு துறைச் செயலாளரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அறியாமைக்கும் இயலாமைக்கும் தி.மு.க. மீது பழிபோடும் போக்கைக் கைவிட்டு, வகிக்கின்ற பொறுப்புக்கேற்ப, பொய்களைத் தவிர்த்து, இனியேனும் உண்மையைப் பேசுங்கள், இதுதான் முதல்-அமைச்சருக்கு இப்போது நான் முன்வைக்கும் வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story