தமிழக சட்டசபை டிஜிட்டல் மயமாகிறது எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்


தமிழக சட்டசபை டிஜிட்டல் மயமாகிறது எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2019 8:30 PM GMT (Updated: 24 Nov 2019 8:14 PM GMT)

தமிழக சட்டசபை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதையொட்டி எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மற்றும் டெல்லி மேல்-சபை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, தேசிய இ-விதான் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சட்டசபைகளில் பேப்பர்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும்.

இ-விதான் திட்டம் நடை முறைக்கு வந்ததும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வழியில் அளிக்கப்படும். இ-விதான் இணையதளத்திலும் நாடாளுமன்றம், டெல்லி மேல்- சபை உள்பட அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்பட்டு இருக் கும்.

அதில், எம்.எல்.ஏ.க்கள் தனியாக லாக்-இன் செய்து கொள்ள முடியும். அந்த லாக்-இன்-ல் அவர்களுக்கு சட்டசபை செயலகம் மூலம் தகவல்கள், நோட்டீஸ்கள், சட்டசபை நிகழ்ச்சிகள் அளிக்கப்படும். அவர்களும் அந்த தளத்தின் வழியாக பதிலளிக்க வேண்டும்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் முடிவு செய்தால், அதையும் இ-விதான் வழியாக ஒளிபரப்பு செய்யலாம். தற்போது இமாசல பிரதேச சட்டசபை முழுமையாக இ-விதான் திட்டத்தை செயல்படுத்துகிறது.

தமிழக சட்டசபையில் இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டசபை செயலகம் தீவிரமாக எடுத்து வருகிறது. முதல்கட்டமாக அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இதை சட்டசபை குழு கூட்ட அறையில் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் ப.தனபால் தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டசபை அலுவலர்களுக்கு டெல்லியில் அடுத்தகட்ட பயிற்சி நடத்தப்படும். இ-விதான் திட்டத்தை பயன்படுத்தும் முறை பற்றி பின்னர் எம்.எல்.ஏ.க்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை என்.ஐ.சி. தயாரித்துள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விவாதங்களையும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

Next Story