இளைஞர்களை கெடுக்கும் தீயகருத்துகளை பரப்பும் படங்களை எடுக்க வேண்டாம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


இளைஞர்களை கெடுக்கும் தீயகருத்துகளை பரப்பும் படங்களை எடுக்க வேண்டாம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-25T01:59:00+05:30)

இளைஞர்களை கெடுக்கும் வகையில் தீயகருத்துகளை பரப்பும் படங்களை எடுக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஐசரி கணேஷ் ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி ‘எல்.கே.ஜி.’, ‘கோமாளி’, ‘பப்பி’ ஆகிய 3 படங்களை தயாரித்தார். இந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களின் வெற்றி விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அவருக்கு ஐசரி கணேஷ் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இதுவரை பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்களில் கலந்துகொண்ட நான் முதன் முறையாக இந்த பட விழாவில் பங்கேற்கிறேன். ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ ஒரே வருடத்தில் 3 வெற்றி படங்களை தயாரித்திருப்பது பாராட்டுக்குரியது.

திரைப்படங்கள் மூலம் பண்பாடு, வாழ்வியல், கலாசாரம் போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. நகைச்சுவை படங்கள் மூலம் தியேட்டர்களுக்கு வருபவர்களின் கவலைகள் மறக்கடிக்கப்படுகிறது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை ஜெயலலிதா சென்னையில் வெற்றிகரமாக நடத்தினார்.

எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் சாதனைகள் நிகழ்த்தி மக்கள் திலகமாக உயர்ந்து முதல்-அமைச்சராகவும் உச்சம் தொட்டார். நடிக்கும்போதே ஏழை மக்கள் மீது பரிவு காட்டினார். நாடகத்துறையில் இருந்துதான் எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்தார். அதுபோல் ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலனும் நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு வந்து, எம்.ஜி.ஆருடன் அரசியலிலும் பயணித்தார்.

திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகளையும், ஒழுக்கத்தையும் எம்.ஜி.ஆர். பரப்பினார். இளைஞர்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தினார். திரைப்பட துறையினர் இளைஞர்களின் நலன் கருதி தீய கருத்துகளை பரப்பும் படங்களை எடுக்க வேண்டாம் என்றும், அதுபோன்ற படங்களில் நடிக்கவும் வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் சமுதாய அக்கறையுள்ள படங்களை எடுக்கும்படி வேண்டுகிறேன்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தரமான படங்களில் நடித்தார்கள். அவர்களை பின்பற்றிய தொண்டர்கள் இப்போது கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். சோதனை காலங்களிலும் அ.தி.மு.க. இரும்பு கோட்டையாக இருப்பதற்கு அவர்கள் உருவாக்கிய தொண்டர்கள் தான் காரணம்.

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா காலம் சினிமாவின் பொற்காலமாக இருந்தது. இன்று தமிழ் பட உலகினர் உலக தரத்துக்கு இணையாக படங்களை எடுக்கிறார்கள். 30 ஆயிரம் மாணவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு கல்வித்துறையில் சிறப்பாக சேவைபுரியும் ஐசரி கணேசும் 3 சிறந்த வெற்றி படங்களை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

ஜெயலலிதா வழியில் இந்த அரசு சினிமாத்துறைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சென்னை திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் நிதி வழங்கியிருக்கிறது. கோவா பட விழாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திரைப்பட துறையினரை இந்த அரசு மறக்காது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக ‘கோமாளி’ படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் உள்பட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், ‘எல்.கே.ஜி.’ படத்தில் நடித்த ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், டைரக்டர் பிரபு உள்ளிட்டோருக்கும், ‘பப்பி’ படத்தில் நடித்த வருண், சம்யுக்த ஹெக்டே உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.சி.வீரமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், டைரக்டர்கள் பாக்யராஜ், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார், திருமலை, நடிகர்கள் ஜீவா, உதயா, சிவா, ஆர்.கே.சுரேஷ், நடிகை குட்டி பத்மினி, பூர்ணிமா பாக்யராஜ், டைரக்டர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாக தயாரிப்பாளர் அஸ்வின் வரவேற்றார்.

Next Story