சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைப்பு


சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Nov 2019 3:36 PM GMT (Updated: 2019-11-25T21:06:23+05:30)

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30ந்தேதியுடன் ஓய்வுபெற்றார். அவரை மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட்டு உத்தரவு செல்லும் என்றும், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டு காலத்துக்கு சென்னை ஐகோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் கடந்த ஏப்ரல் 12ந்தேதி தீர்ப்பு கூறியது.

சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், அந்த வழக்குகள் தொடர்பாக யாரையும் கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், கடத்தல் வழக்கு தொடர்பான அறிக்கைகளை இத்துறையின் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவேண்டும் என்றும், அந்த அறிக்கையின் மீது அதிகாரி அபய்குமார் சிங் முடிவெடுப்பார் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை மேற்கொண்டு வரும் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலின் பதவி காலம் நவம்பர் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.  இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு விசாரணை ஒன்றில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.  அதனால் பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்து எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.  இதனை அடுத்து சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகள் டிசம்பர் 6ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

Next Story