எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல ஜொலிக்க முடியாது: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கமல்ஹாசன் நிலைமைதான் ஏற்படும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல ஜொலிக்க முடியாது: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கமல்ஹாசன் நிலைமைதான் ஏற்படும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2019 4:00 AM IST (Updated: 26 Nov 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் சினிமாவிலும், அரசியலிலும் ஜொலிக்க முடியாது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

அமைச்சர் ஜெயக்குமார், நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு விரைவில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இது குறித்து தமிழகத்தின் நலன் கருதி முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் சில கருத்துகளை மத்திய ஜலசக்தி மந்திரியை சந்தித்து நானும், அமைச்சர் தங்கமணியும் பேச இருக்கிறோம்.

மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் திரைப்படங்களிலும், அரசியல் வானிலும் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள். மக்களின் மனதில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் சக்தியாக இன்றும் உள்ளனர்.

ஆனால் இன்று ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் திரைப்படங்களில் நட்சத்திரங்களாக இருக்கலாம். ஆனால் அரசியல் வானில் இவர்கள் ஜொலிக்காத நட்சத்திரங்கள்தான். கமல்ஹாசன் கட்சியை தொடங்கி தேர்தலில் தனது பலம் என்ன? என்பதை தெரிந்து கொண்டார்.

அதேபோல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியல் செய்யும்போது கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கும் ஏற்படும்.

பொதுக்குழுவில் அமைச்சர் தங்கமணி 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் குறித்து பேசியதை வைத்து வீணாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story