மின் கம்பம் சரிந்து விழுந்து முதுகு தண்டுவடம் பாதிப்பு: பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வாலிபர் சென்னை மாநகராட்சி ரூ.63¼ லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு


மின் கம்பம் சரிந்து விழுந்து முதுகு தண்டுவடம் பாதிப்பு: பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட வாலிபர் சென்னை மாநகராட்சி ரூ.63¼ லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Nov 2019 9:30 PM GMT (Updated: 2019-11-27T02:50:39+05:30)

சென்னை மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால் மின் கம்பம் சரிந்து விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.63¼ லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். வாலிபரான இவர், கடந்த 2009-ம் ஆண்டு சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மின் கம்பம் சரிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

பழுதான மின் கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தபோது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஆனந்தகுமாரின் முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் தனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி ஆனந்தகுமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட ஆனந்தகுமார் சக்கர நாற்காலியில் ஐகோர்ட்டுக்கு நேரில் வந்து தனது தரப்பு கோரிக்கையை எடுத்து வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திருமணம் செய்துகொள்வதும், பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பதும் அவரவர் விருப்பம். திருமணம் செய்து கொள்ளும்படியோ அல்லது பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்கும்படியோ ஒருவரை வற்புறுத்துவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட ஆனந்தகுமார் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். அவரால் நடக்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. இன்னொருவர் உதவி இல்லாமல் இயற்கை உபாதையை கூட கழிக்க முடியாது.

மாநகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவால் திருமணம் செய்து கொள்ளும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

எனவே பாதிக்கப்பட்ட ஆனந்தகுமாருக்கு 63 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில் இந்த தொகை வழங்கப்பட வேண்டும்.

இழப்பீட்டுத் தொகையில் ரூ.10 லட்சத்தை ஆனந்தகுமாரின் வங்கிக் கணக்கில் மாநகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை நிரந்தர வைப்பு தொகை கணக்கில் வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஆனந்தகுமாருக்கு மாதம் தோறும் வழங்க வேண்டும்.

ஆனந்தகுமாரின் ஊனத்தை கருத்தில் கொண்டு இந்த தொகைக்காக வருமான வரி பிடித்தம் எதுவும் செய்யக்கூடாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story