சமூகநீதியை காக்கும் அரணாக: தி.மு.க. எப்போதும் திகழும் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


சமூகநீதியை காக்கும் அரணாக: தி.மு.க. எப்போதும் திகழும் - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 26 Nov 2019 10:30 PM GMT (Updated: 26 Nov 2019 9:25 PM GMT)

சமூகநீதியை காக்கும் அரணாக தி.மு.க. எப்போதும் திகழும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

1967-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து, பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, 1969-ல் கருணாநிதி முதல்-அமைச்சரான பிறகு, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டரீதியான வலுச்சேர்க்கவும், நடைமுறையில் கூடுதல் பலனளிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒடுக்கப்படுவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாய்ப்புகளுக்காக, சட்டநாதன் கமிஷன் அமைக்கப்பட்டது.

1989-ம் ஆண்டு, கருணாநிதி தலைமையில் தி.மு.க. அரசு மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றபோது தான், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீத இடங்களை அவர்களுக்கு உறுதி செய்து, மீதி 20 சதவீத இடங்களை தனியாக பிரித்து, மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவை உண்டாக்கி, அவர்களுக்கான இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் 18 சதவீதம் முழுமையும் பட்டியல் இனத்திற்கும், பழங்குடியினருக்கு தனியாக 1 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கி ஆணையிட்டு நிறைவேற்றியவர், கருணாநிதி. இதுதான் தமிழ்நாட்டில் நிலவும் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் வரலாறு. இந்த 69 சதவீத இட ஒதுக்கீடு என்பதை, எண்ணிக்கை அளவிலும் ஏற்றத்தாழ்வற்ற முறையிலும், அனைத்து சமூகத்தினருக்கும் கிடைக்க செய்தது, கருணாநிதி தான்.

அதேநேரத்தில், இடஒதுக்கீடு பறிபோவதை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திய ஜெயலலிதா அரசை கண்டித்து, சமூகநீதியை காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் கருணாநிதி. அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தற்போது எம்.பி.யாக உள்ள திருநாவுக்கரசர், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவராக இருந்த அப்துல் லத்தீப் உள்ளிட்டோர் போராட்டக்களத்திற்கு ஆயத்தமாகி, தலைவரின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தபோது, கருணாநிதியுடன் போராட்டக் களத்திற்கு புறப்பட்ட தலைவர்களையும், கோபாலபுரத்திலேயே கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றியது தான் ஜெயலலிதாவின் அரசு.

தொடர்ச்சியான போராட்டக்குரலும், கண்டன அறிக்கைகளும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சட்டரீதியாக வழங்கிய கருத்துருவும், ஜெயலலிதாவின் கண்களை மெல்ல திறக்கச் செய்தன. அதன்பிறகே, சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்கப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்பட்டது. அதன்பிறகும் கூட, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்குகளால் இன்றளவிலும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்திட தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தவேண்டியுள்ளது.

பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றையும் இந்த 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வந்து, முழுமையான சமூகநீதியை கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. ஜெயலலிதா ஆட்சியில் இதுபோல எவருக்கேனும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? எத்தனை சதவீதம் வழங்கப்பட்டுள்ளது?. இடஒதுக்கீட்டின் வரலாறு பற்றி அக்கறையில்லாமல், உண்மை விவரங்கள் அறியாமல், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம் என, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் உதட்டளவில் உரக்கப் பேசியிருக்கிறார்.

நீட் தேர்வு எனும் கொடுவாளால் மருத்துவக்கனவு காணும் கிராமப்புற ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் வெட்டி சாய்க்கப்படுகிறதே, அந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நிறைவேற்றப்பட்ட சட்டமன்ற தீர்மானம், மத்திய அரசின் குப்பை கூடைக்கு போனதைக்கூட அறியாத முதல்- அமைச்சர்.

சமூகநீதிக்கு பெரும் அபாயம் சூழ்ந்துள்ள இந்த நிலையிலும், அதனை பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்ற செயல்பாடுகளையும் தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடுவதும் தி.மு.க கூட்டணி தான். கருங்கற்களால் ஆன கோட்டை போல, சமூகநீதியை கட்டிக்காத்தது தி.மு.க. அரசு. அந்த கோட்டையை தகர்த்து, சமூகநீதிக்கு கல்லறை கட்ட நினைப்போருக்கு செங்கல் எடுத்து கொடுக்கிறது அ.தி.மு.க. அரசு.

சமூகநீதி கொள்கை வேரூன்றியுள்ள தமிழ்நாட்டு மண்ணில், அதற்கு எதிரான சக்திகளை முறியடித்து, சமூகநீதியை காக்கும் அரணாக தி.மு.க. எப்போதும் திகழும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story