‘கிடுகிடு’ விலை உயர்வு: ஓட்டல்களில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு


‘கிடுகிடு’ விலை உயர்வு: ஓட்டல்களில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 26 Nov 2019 11:30 PM GMT (Updated: 2019-11-27T05:59:00+05:30)

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், ஓட்டல்களில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆம்லெட்களில் முட்டைகோஸ் தூவப் படுவதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சென்னை,

வெங்காயம் விலை உச்சம் அடைந்துள்ளதே தற்போது பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது. வரலாறு காணாத அளவு உயர்ந்து வரும் வெங்காயம் விலை பொதுமக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் கண்களில் உரிக்காமலேயே வெங்காயம் விலை கண்ணீரை வரவழைத்து வருகிறது.

பல்லாரி வெங்காயம் விலை உயருகிறதே என்று சாம்பார் வெங்காயத்தை பயன்படுத்திய மக்கள், இப்போது அதன் விலையும் உயர்ந்திருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்புகிறார்கள். இதனால் பலரது வீடுகளில் இட்லி-தோசைக்கு சட்னி, சாம்பாருக்கு பதில் இட்லி பொடி பரிமாறப்படுகிறது.

வெளிச்சந்தைகளில் பல்லாரி வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை ஆகிறது. சாம்பார் வெங்காயம் விலை ரூ.160-ஐ தாண்டி ‘டாப்’ கியரில் பயணித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் தொடர்மழை காரணமாக விளைச்சல்-வரத்து பாதித்துள்ள நிலையில், விவசாயிகள் கை இருப்பில் உள்ள வெங்காயமே விற்பனைக்காக வந்துகொண்டிருக்கிறது.

இதனால் பெரும்பாலான தெருக்கடைகளில் வெங்காயமே இல்லை என்றாகிவிட்டது. நடமாடும் கடைகளிலும் வெங்காயத்தை காணவில்லை. ‘அப்படி என்னதான் வந்ததோ இந்த வெங்காயத்துக்கு...’ எனும் வகையில் வெங்காயத்தை காணுவதே அரிதாகி வருகிறது.

சமையலுக்கு பிரதானமான வெங்காயம் மீதான விலையேற்றம் ஓட்டல்-உணவகங்கள் நடத்துவோருக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கிறது. என்னதான் கமகமக்க பிரியாணி வைத்தாலும் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் வெங்காய பச்சடியில் தான் சிறப்புள்ளது. அதேபோல அனைத்து உணவுகளிலும் தவறாமல் இடம்பெற்று நாவிற்கு சுவை சேர்ப்பது வெங்காயம் தான்.

அத்தகைய வெங்காயத்துக்கு தற்போது ஓட்டல்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பிரியாணிக்கு சிறிய கிண்ணத்திலேயே வெங்காயம் பரிமாறப்படுகிறது. சில ஓட்டல்களில் அதுவும் இல்லை. அப்படி பரிமாறப்படும் வெங்காய பச்சடியில் வெள்ளரியும், கேரட்டுமே அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெள்ளரி-கேரட் துண்டுகள் மட்டுமே தயிரில் கலந்திருக்கிறது.

அதேபோல ஆம்லெட்களில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் தூவப்படுகிறது. பல ஓட்டல்களில் வெங்காயம் இல்லாமலேயே பிளைன் ஆம்லெட்கள் மட்டுமே போடுகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் முணுமுணுத்துக்கொண்டு சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. சிக்கன் ரைஸ், எக் ரைஸ் போன்ற துரித உணவுகளிலும் வெங்காயத்துக்கு பதில் முட்டை கோஸ் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

சால்னா புரோட்டாவுக்கே வெங்காயத்தை சைட்-டிஷ் ஆக சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்ட உணவு பிரியர்கள், தற்போதைய சூழ்நிலையில் பரிதவித்து வருகிறார்கள். ‘காசு கொடுத்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் மறுமுறை தயிர் பச்சடி கேட்டால் கடைக்காரர்கள் முறைக்கிறார்கள். இப்படியே போனால் தயிர் பச்சடிக்கு தனியாக காசு வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று வாடிக்கையாளர்கள் புலம்புகிறார்கள்.

இப்படி அனைத்து தரப்பினரையும் வெங்காயம் விலை புலம்ப வைத்துவிட்டது. கடன் கேட்டாலும் கேட்பார்கள் என்பதால் வீட்டில் உள்ள வெங்காயத்தையும் அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்து வைத்து பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. இதனை சரிசெய்யவும், வெங்காயம் விலையை குறைக்கவும் உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story